தொடரும் அவலம்! எப்போது வரும் விடிவுகாலம்?

தொடரும் அவலம்! எப்போது வரும் விடிவுகாலம்?

நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல், உயர்தட்டு முதல் கீழ்தட்டு மக்கள் வரை அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது வரையிலும் அந்நாட்டின் வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், கிராமங்களின் பல இடங்களிலும் இன்னமும் பல பிரச்சினைகளை மக்கள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த சூளகிரி அருகே பாலம் இல்லாததால், அவ்வூர் மக்கள், உயிரிழந்த ஒருவரின் சடலத்தை சுமந்தபடி, ஆற்றைக் கடந்து தூக்கிச் செல்லும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூளகிரி அருகே பீளாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான சக்கார்லம்மா. இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவருக்கு பிள்ளைகள் யாரும் இல்லாத காரணத்தால், அவரது உறவினர்கள் சார்பில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

அங்குள்ளவர்கள் மயானத்திற்கு உடலை எடுத்துச் செல்ல ஆற்றுவழிப் பாதையை வழக்கமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது பெய்துவரும் அதிகமழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் செல்கிறது. வேறு வழியின்றி, ஆற்றின் இருபுறத்திலும் கயிறுகட்டியபடி, சடலத்தை மறுமுனைக்கு எடுத்துச் சென்றனர். பெண்களும் கயிறைப் பிடித்தபடி ஆற்றைக் கடந்தனர்.

மழையின் காரணமாக வெள்ள நீர் அதிகம் பெருக்கெடுக்கும் சமயத்தில் இதுபோன்ற இன்னல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், அரசு இதை கவனத்தில் கொண்டு, தரைப்பாலம் அமைத்துத் தர வேண்டும் எனவும் பீளாளம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com