உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து சர்ச்சைப் பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து சர்ச்சைப் பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது!

ணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ‘மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறி மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடி இருந்தார். இதுகுறித்து தனியார் யுட்யூப் சேனல் ஒன்றில் பேசிய பதிப்பாளரும் எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி, “மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும்? அவரிடம் துப்பாக்கையைக் கொடுத்து மணிப்பூருக்கு அனுப்பி வைக்கலாம்” என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை பத்ரி சேஷாத்ரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் இன்று சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஏற்கெனவே, தமிழக அரசின் தமிழ் இணையக்கல்வி கழகத்துக்கான ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்த பத்ரி சேஷாத்ரி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்து இணையதளத்தில், சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். ‘மூன்று மாதங்களில் இந்தி கற்க முடியும். அதன் பிறகு அந்த மொழியில் கற்க ஒன்றுமில்லை’ என்று பேரறிஞர் அண்ணா கூறி இருந்தார். அது ஒரு அபத்தமான கூற்று என்றும், ‘அண்ணா ஒரு முட்டாள்’ என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பத்ரி சேஷாத்ரி கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பதிவிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அவரை, தமிழ் இணையக்கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை விமர்சனம் செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், பத்ரி சேஷாத்ரியின் கைதுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் (X) பதிவில், "புகழ் பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ளத் திராணியற்று, கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும்தான் தமிழக போலீசாரின் பணியா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com