வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். பாஜக கடந்த சில நாட்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இது தொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளதோடு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்றாக காயத்ரி ரகுராம் அவர்களை கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அவர் வகித்து வரும் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது. பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டதையடுத்து அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார்.
காயத்ரி ரகுராம் தனது பதவி பறிக்கப்பட்டது பற்றி தொடர்ந்து பல்வேறு ட்வீட்களை பதிவிட்டார். பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில், எனது ஒரே தலைவர் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி என்று காயத்ரி ரகுராம் பதிவிட்டார். என்மீது அன்பு கொண்டவர்கள் என்னை தொடர்பு கொள்வார்கள் என்றும் பதிவிட்டார். அவரின் ட்விட்டர் பதிவுகள் பெரிய அளவில் சர்ச்சையாகி வருகிறது.