பா.ஜ.க.வினரின் சர்ச்சை பேச்சு: பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம், என்ன முடிவெடுப்பார் எடப்பாடி?

பா.ஜ.க.வினரின் சர்ச்சை பேச்சு: பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம், என்ன முடிவெடுப்பார் எடப்பாடி?

ஆட்சி மாற்றத்தை விட அரசியல் மாற்றமே முக்கியம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தின் அரசியல் மாற்றத்தை பா.ஜ.கவால் மட்டுமே செய்யமுடியும் என்பதையும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சமீபத்திய சென்னை பயணம், தமிழக பா.ஜ.கவினரை சுறுசுறுப்பாக்கியிருக்கிறது. மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கக்கூட்டங்களை ஆரம்பித்து வைத்து, வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, முதல்முறையாக தி.மு.கவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்க கட்சி தயாராகி வருகிறது.

நேற்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க அரசின் 9 ஆண்டு காலத்தில் செய்தவற்றை பட்டியலிட்டார். மத்தியில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள பா.ஜ.க ஆட்சியால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. 9 ஆண்டுகளாக பா.ஜ.க தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறது என்று தமிழக முதல்வர் கேட்டிருக்கிறார். 9 ஆண்டுகளாக நடைமுறைக்குக் கொண்டு வந்த மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்திய காரணத்தால்தான் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல அரசியல் மாற்றமும் கட்டாயம் தேவை. அதை பா.ஜ.க கட்சியில் நிச்சயம் செய்ய முடியும். அரசியல் மாற்றத்திற்கான அடித்தளமாகத்தான் நம்முடைய கூட்டம் உள்ள. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று, வெற்றியை மோடிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார்.

ஒரு பக்கம் கூட்டணி சார்பில் போட்டியிட்டு 40 இடங்களை வெல்வோம் என்கிறார், இன்னொரு பக்கம் அரசியல் மாற்றம் வேண்டும் என்கிறார்கள். அ.தி.மு.கவோடு கூட்டணி உண்டா, இல்லையா என்பது அண்ணாமலைக்கும் தெரியவில்லை, அமித்ஷாவும் சொல்லவில்லை. இதெல்லாம் ஏற்கனவே குழப்பத்தில் உள்ள பா.ஜ.கவினரை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்கிறது அறிவாலய வட்டாரம்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்தும், ஜெயலலிதா குறித்து அண்ணாமலையின் கருத்து குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com