கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வழக்கமான ரெயில் சேவை இன்று தொடங்கியது!

ரயில்
ரயில்

ரயில் விபத்துக்கு பிறகு தற்போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று தொடங்கியது. வழக்கமாக காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரெயில் 10.45 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. அதே போன்று இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய ஹவுரா ரெயிலும் வழக்கம் போல் புறப்பட்டு செல்லும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் நடந்த மிக பெரிய ரெயில் விபத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்படும் தினசரி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இரு மார்க்கத்தில் இருந்தும் பாதிக்கப் பட்டவர்களுக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப் பட்டன.

சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு ஒரு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் அதே போல் இரவு 7.20 மணிக்கு ஒரு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்படுகிறது. 28 மணி நேர பயணத்துக்கு பிறகு இந்த ரெயில்கள் ஹவுரா சென்றடையும். பல ஆண்டுகளாக இந்த வழித் தடத்தில் இந்த இரு ரெயில்களும் தான் இயக்கப்படுகிறது. ஆனால் இப்போது பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று தொடங்கியது. வழக்கமாக காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரெயில் 10.45 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயிலில் 3 குளிர்சாதன பெட்டிகள், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 2 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளால் ரெயில் நிரம்பி இருந்தது. ரெயில்கள் ரத்தானதால் கடந்த 2 நாட்களாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்த தொழிலாளர்கள் ஏராளமானோர் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்தனர். இந்த ரெயில் கூடூர், நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகபட்டினம், பலாசா, பெர்காம்பூர் வழியாக நாளை மாலை 6 மணியளவில் ஹவுரா சென்றடையும்.

இதற்கிடையில் ஒடிசாவில் இருந்து நேற்று புறப்பட்ட சிறப்பு ரெயில் இன்று பிற்பகல் சென்னை வந்தடைகிறது. இன்றும் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினர் யாராவது ஒடிசா செல்வதாக இருந்தால் அவர்களுக்கு இலவச பாஸ் வழங்கப்படும். அவர்கள் கூடுதல் தகவல்களுக்கு 044-2533 0952, 044-2533 0953, 044-2535 4771, 044-2535 4148, 044-2533 0953 என்ற தொலை பேசி எண்கள் மூலமும், 90030 61974 எனும் கைப்பேசி எண் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com