கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை தினசரி அடிப்படையில் இயக்கப்படுகிறது. இன்று மதியம் 3.20 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து இந்த ரயில் கிளம்பியது. இந்த நிலையில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம், பாலசோர் நகரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வனப்பகுதியில் இந்த விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சரக்கு ரயில் ஒன்றின் மீது இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. விபத்தில் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. புவனேஷ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஐம்பது ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் இந்த ரயில் விபத்தை தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அவசர உதவிக்கு 6782262286 மற்றும் 044-25354771 என்ற எண்களைத் தொடர்பு கொள்ள தென்னக ரயில்வே துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.