கோரமண்டல் ரயில் விபத்து - கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான ரயில் விபத்து!

கோரமண்டல் ரயில் விபத்து - கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான ரயில் விபத்து!

சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கோரமண்டல் ரயில் ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் விபத்து ஏற்பட்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை 233 பேர் உயிரிழந்ததாகவும், 900 பேர் படுகாயமடைந்திருபபதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட மோசமான சம்பவமாக நேற்றைய விபத்து பார்க்கப்படுகிறது.

1981ல் 900 பயணிகளோடு தடம் புரண்ட பாட்னா ரயில், சாஹர்சா என்னுமிடத்தில் பாக்மதி ஆற்றில் விழுந்த விபத்தில் 500 பேர் உயிரிழந்தார்கள். இதுவரையிலான ரயில் விபத்துகளில் அதிகப்படியான உயிர் சேதங்களை சந்தித்த விபத்து இது. 1995ல் உத்திரப் பிரதேசம் பிரோசாபாத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 358 பேர் உயிரிழந்தார்கள்.

1999ல் அஸ்ஸாமியின் கெய்சால் என்னுமிடத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 290 பயணிகள் உயிரிழந்தார்கள். அதே போல் கொல்கத்தாவிலிருநது வந்து கொண்டிருந்த ரயிலும் கோல்டம் டெம்பிள் மெயில்ரயிலும் அம்ரித்சர் அருகே மோதிக்கொண்டதில் 212 பேர் உயிரிழந்தார்கள்.

மில்லினியத்திற்கு பின்னர் 2002ல் ஹவ்ராவிலிருந்து புது தில்லி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் கயாவுக்கும் டெஹ்ரிக்கும் இடைப்பட்ட பகுதியில் தடம் புரண்டதில் 140 பேர் உயிரிழந்தார்கள். அன்றைய நிலையில் இந்தியாவிலேயே அதிக வேகத்தில் செல்லக்கூடிய ரயிலாக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இருந்த காரணத்தால் உயிரிழப்பு அதிகமாக இருந்தது.

2005, 2016 காலங்கட்டங்களிலும் ரயில் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. இரு நிகழ்வுகளிலும் வேகமாக சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விழுந்ததால் உயிர் பலி ஏற்பட்டது. ஆனால், 2010ல் நடந்த ரயில் விபத்தை, நேற்று நடந்த ரயில் விபத்தோடு ஒப்பிடமுடியும்.

2010ல் மும்பையிலிருந்து ஹவ்ரா சென்று கொண்டிருந்த கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் மாறியதில் மாற்றுப்பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மோதி 170 பேர் உயிரிழந்தார்கள். தடம் புரண்டு விழுந்தால் உயிர் பலி எண்ணிக்கை 100 இருந்திருக்கும்.

ஆனால், அருகிலிருந்த டிராக்கில் விழுந்த காரணத்தால் எதிரே வந்த சரக்கு ரயில் மோதியதால் 3 கோச்சில் உள்ள 170 பேர் பலியானார்கள். நேற்று நடந்த விபத்தும் இதே பாணியில் அமைந்திருப்பதால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

தடம் புரண்டு வேறு டிராக்கில் விழுந்த 4 கோச்சுகளும் ஸ்லீப்பல் கோச் என்பதால் அதில் அதிகமான பயணிகள் பயணம் செய்திருக்க வாய்ப்புண்டு. முன்பதிவு செய்யப்படாத பயணிகளும் பயணித்திருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com