கோரமண்டல் ரயில் விபத்து - நடந்தது என்ன? களத்திலிருந்து ஒரு ரிப்போர்ட்!
பாலாஷோரில் குடும்பத்துடன் ரயில் ஏறிய கிருஷ்ண சாகுவுக்கு வயது முப்பது. பத்தாண்டுளாக சென்னையில் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார். இம்முறை கோடை விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர், வரும்போது தன்னுடைய வயதான பெற்றோர்களையும் அழைத்து வர திட்டமிட்டு முன்கூட்டியே ரயிலில் முன்பதிவு செய்திருந்தார்.
நேற்று மாலை பாலோஷோரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள தன்னுடைய ஊரிலிருந்து குடும்பத்தோடு கிளம்பியவர், முன்கூட்டியே வந்து சேர்ந்துவிட்டார். கெராமண்டல் எக்ஸ்பிரஸ் சரியாக மாலை 6 மணிக்கு பாலாஷோர் வந்துவிட்டது. ஏ.சி மூன்றாவது வகுப்பில் குடும்பத்தோடு ஏறிக்கொண்டவர் அடுத்து அரை மணி நேரத்தில் அப்படியொரு விபத்து ஏற்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை.
பாலாஷோரிலிருந்து கிளம்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், 30 நிமிடங்கள் பயணம் செய்து பாகாநகா பஜார் என்னுமிடத்தை வந்தடைந்திருக்கிறது. இரண்டாவது பிளாட்பாரமில் வந்து கொண்டிருந்த ரயில், சிக்னலில் ஏற்பட்ட குளறுபடியால் மூன்றாவது பிளாட்பாரத்திற்கு மாறியிருக்கிறது. மூன்றாவது பிளாட்பாரத்தில் சரக்கு ரயில் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை.
அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸின் டிரைவில் 300 மீட்டர் தொலைவில் சரக்கு ரயில் இருப்பதைப் பார்த்து பிரேக் அடிப்பதற்குள் எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது பாய்ந்துவிட்டது. என்ஜின் கோச், அதையொட்டியிருந்த லேடீஸ் கோச், அன்ரிசவர்டு கோச் தவிர முதல் மூன்று ஸ்லிப்பர் கோச்சு அனைத்தையும் தடம் மாறி, சர்வீஸ் ரோட்டில் விழுந்து சின்னபின்னமாகிவிட்டன.
அன்ரிசவர்டு கோச்சில் எத்தனை பேர் இருந்தார்கள் என்கிற விபரம் தெரியிவில்லை. 62 கொள்ளளவும் கொண்ட பெட்டியாக இருந்தாலும் அதை விட மூன்று மடங்கு ஆட்கள் அதில் ஏறியிருக்க வாய்ப்புண்டு. ஸ்லீப்பர் கோச்சகளை தொடர்ந்து இருந்த ஏ.சி பெட்டிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஏ.சி மூன்றாவது வகுப்பின் டாய்லெட்டில் இருந்த கிருஷ்ண சாகு அதை உடைத்துவிட்டு வெளியே வருவதற்கு சிரமப்பட்டிருககிறார்.
விபத்து ஏற்பட்ட பத்து நிமிடங்களுக்கு பின்னர் முதல் பிளாட்பார்மில் வேகமாக வந்து கொண்டிருந்த ஹவ்ரா ரயிலில் இருநதவர்கள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது தெரியாது. கோரமண்டல் எக்ஸ்பிரஸின் தடம் மாறிய சிலகோச்சுகள் முதல் பிளாட்பார்மில் விழுந்துவிட்டதை யாரும் கவனிக்கவில்லை. வேகமாக வந்து கொண்டிருந்த ஹவ்ரா ரயில், சிதறிக்கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகளின் மீது மோதியதால் அடுத்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதில் கோரமண்டல் மற்றும் ஹவ்ரா என இரண்டு ரயில்களின் பெட்டிகளும் பாதிக்கப்பட்டன. ஹவ்ரா மெயில் ரயிலின் என்ஜின் மற்றும் லேடீஸ் கோச், அன்ரிசர்வ்ட் கோச் மூன்று பகுதிகளில் பலத்த சேதத்திற்குள்ளாகியிருக்கிறது. இருள் சூழ்ந்த பகுதியில் விபத்து நடத்த பத்து நிமிடங்களில் இன்னொரு விபத்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டது.
ஒட்டுமொத்தமாக இரண்டு ரயிலையும் சேர்த்து 7 கோச் பெட்டிகள் உருக்குலைந்து போயின. இதில் இருந்தவர்களில் 200க்கும் அதிகமானவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். ஏறக்குறைய 600 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்களின் உதவியினால் உடனடியாக மீட்புப் பணிகளை ஆரம்பிக்க முடிந்திருக்கிறது.
விபத்தின் தன்மை, அது நிகழ்ந்த இடம் என்பதையெல்லாம் பார்க்கும்போது மீட்புப்பணிகள் ஆரம்பத்தில் சிக்கலாகவே இருந்திருக்கிறது. அடுத்தடுத்து வந்த தேசிய பேரிடர் படைகளின் அயராத பணியின் காரணமாக 15 மணி நேரத்தில் அனைவரையும் மீட்க முடிந்திருக்கிறது.
தற்போதைய நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்திருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பலரது உடல்நிலை மோசமாக இருப்பதால் உயிர் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும்.
சிறிய காயங்களுடன் டாய்லெட்டில் இருந்து தப்பித்த கிருஷ்ண சாகு, விபத்துக்குள்ளான ரயிலில் இருந்த தன்னுடைய குடும்பத்தினரை காப்பாற்றி மெயின் ரோட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். உள்ளூர் மக்களின் உதவியோடு அங்கிருந்து தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வந்த சேர்ந்திருக்கிறார். கொடூர விபத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவரது குடும்பம் இன்னும் மீளவில்லை