கொரோனாவினால் மூளை செயல்பாடு பாதிப்பு ஏற்படும். ஆய்வில் வெளிவந்த உண்மை.

கொரோனாவினால் மூளை செயல்பாடு பாதிப்பு ஏற்படும். ஆய்வில் வெளிவந்த உண்மை.
Published on

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மூளை செயல்பாட்டில் பாதிப்பு இருக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று இந்த உலகத்தையே நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அதி தீவிரமாக பரவி, பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. தற்போது அதன் தாக்கம் முற்றிலும் குறைக்கப்பட்டு, மக்கள் நிம்மதியாக இருந்து வருகிறார்கள் என்று நினைக்கையில், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் கழித்தும் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்ற உண்மையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சி மாணவர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா தொற்று நீண்டகால மூளை செயல்பாடு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் காலப்போக்கில் அவர்களின் மூளை செயல் திறன் எவ்வாறு மாறியது என்பதை தெரிந்து கொள்ள ஆய்வு செய்யப்பட்டது. இதில் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு இரண்டு வரை சில நபர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் அவர்களின் மூலை செயல்பாடுகள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. 

பணிகளில் கவனம் செலுத்துவது, நினைவு கூறும் திறன் அல்லது பேசும்போது சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து பேசுவது போன்ற அறிவார்ந்த செயல்பாடுகள், கொரோனா தொற்றுக்குப் பிறகு சிரமமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த அறிகுறிகளை ஆய்வாளர்கள் Brain Fog என்று அழைக்கிறார்கள். 

அதாவது அதிகமான வேலைப் பளு, மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக நேரம் கணினி பயன்படுத்துதல் போன்றதால் ஏற்படும் கவனக்குறைவு, குழப்பம், மறதி மனத்தெளிவின்மை ஆகியவையே Brain Fog எனப்படுகிறது. இவை கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் ஆனவர்களிடமும் பொதுவாகக் காணப்படுகிறது.

மார்ச் 2023 நிலவரப்படி இங்கிலாந்தில் மட்டும் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றினால், கவனம் செலுத்துவதில் சிரமம் இருப்பதாகவும், 7 லட்சம் பேர் குழப்பம் அல்லது நினைவிழப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் நினைவாற்றல் குறைபாடு, நினைவிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இவை காலம் செல்லச் செல்ல பல தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com