கொரோனா ஆட்டம் ஆரம்பம் - நாளை முதல் தமிழக மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம்!

கொரோனா ஆட்டம் ஆரம்பம் - நாளை முதல் தமிழக மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம்!

தேசிய அளவில் கொரோனா பாதிப்பு திடீரென்று அதிகரிக்க ஆரம்பித்தது. சென்ற வாரம், பிரதமர் தலைமையில் கொரானா தடுப்பு ஆய்வுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் இது குறித்து விளக்கமளித்த அமைச்சர், நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுவதாகவும், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் சரிவர கடைப்பிடிக்காத காரணத்தால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், கொரானா பாதிப்பிலிருந்து மக்களை மீட்க, சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன. கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், .திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதார கட்டமைப்பை பலப்படுத்தி வருவதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. முதல் கட்டாமாக, பொது இடங்களில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது

கடந்த டிசம்பர் மாதம் முதல் உருமாறிய கொரோனாவான 'பிஎப்.7' அலை தொடர்ந்து இருந்து வருகிறது. அதிதீவிரமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளதால், சீனாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு தற்போது இந்தியாவில் ஆட்டத்தை ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

புத்தாண்டில் குஜராத்தில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது, பின்னர் தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். பின்னர் மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.

மாநிலங்கள் விழிப்புடன் இருக்கவும், கோவிட்19 மேலாண்மைக்கான அனைத்துத் தயார்நிலையையும் வைத்திருக்கவும் சென்ற வாரம் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. முந்தைய அலைகளைப் போல் மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக செயல்பட்டாக வேண்டும். இப்போதைக்கு ஒரே கவசம், முகக்கவசம்தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com