கொரானா தொற்று, 12 ஆயிரத்தை கடந்தது - கோடையிலும் அதிகரிக்கும் கொரானாவின் ஆட்டம்!

கொரானா தொற்று, 12 ஆயிரத்தை கடந்தது - கோடையிலும் அதிகரிக்கும் கொரானாவின் ஆட்டம்!

தேசிய அளவில் கோவிட் தொற்று பரவல் அபாயம் நீங்கிவிடவில்லை. மாதந்தோறும் குறைந்தபட்சம் இரண்டாயிரம் நோயாளிகள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டு வருகிறார்கள். கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தேசிய அளவில் நிறைய பேர் இருக்கிறார்கள். முகமூடிதான் இன்னும் பாதுகாப்பு கவசமாக இருந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 12,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் 12,591 ஆக உயர்ந்து இருந்தது. நாடு முழுவதும் கடுமையான கோடை கொளுத்துகிற நேரத்திலும் கொரானா எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறி வருகிறது.

கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ஏறி வந்த கொரானா தொற்று, கடந்த வாரம் பத்தாயிரத்தை கடந்தது. அதையெடுத்து தேசிய அளவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூடி சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். மத்திய அரசின் உத்தரவுப்படி நாடு முழுவதும் மாவட்ட அளவில் கொரானா தடுப்பு ஒத்திகைகளும் நடந்தன.

கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் கொரானா எண்ணிக்கை சற்று குறைந்தது. ஆனால், நேற்று முதல் தொடர்ந்து அதிகரித்த நிலையில் இருக்கிறது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 2,403, டெல்லியில் 1,758, அரியானாவில் 1,348, மகாராஷ்டிராவில் 993, உத்தரபிரதேசத்தில் 988 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 81 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 10,765 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 83 ஆயிரத்து 21 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரனாவுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணி, 67,556. தினமும் ஆயிரம் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். கொரானாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றமில்லை. கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லியில் 8 பேர், மகாராஷ்டிராவில் 5 பேர், கேரளா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கரில் தலா 3 பேர் உள்பட 32 பேர் இறந்துள்ளனர். மொத்த பலியின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது.

கொரானா வைரஸ் மனிதர்களுடன் வாழும். அதை முற்றிலுமாக நீக்கிவிடமுடியாது. தடுப்பூசியினாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் மட்டுமே நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது இன்றும் அவசியமாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com