தமிழகத்தில் ஓமைக்ரான் வகையான எக்ஸ்.பி.பி(XBB),பிஎ2(BA2) வகை வைரஸ் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த ஒரு மாதமாக சென்னையை பயமுறுத்திக் கொண்டிருந்த இன்ப்ளூன்ஸா காய்ச்சல் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
H3N2 காய்ச்சல் பாதிப்புக்கு தமிழ்நாட்டில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகள் இல்லையென்றாலும் கொரானா எண்ணிக்கை தொடர்ந்து ஏறி வருகிறது. ஆனாலும், மக்கள் பதற்றப்படத் தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொரானா பாதிப்புக்குள்ளாகி இறந்தவரின் மருத்துவ அறிக்கையில் ஒமைக்ரான் எக்ஸ்.பி.பி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததது பீதியை கிளப்பியிருந்தது.
இந்நிலையில் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்திருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர், இரண்டு மாதங்களுக்கு முன்பு தினசரி இரண்டு என்னும் எண்ணிக்கையில் இருந்த தொற்று, படிப்படியாக 70 ஆக அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் 35 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து வருகிறோம். 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா 2ம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வைரஸ் காய்ச்சல் தமிழ்நாட்டில் எச்.3.என்.2. வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதற்காக காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டன. முகாம்களின் மூலம் 10 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 7 ஆயிரத்து 255 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. இவர்கள் பூரண குணம் அடைந்து உள்ளார்கள். இவர்களில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். எச்.3.என்.2 வகை காய்ச்சல் முடிவுக்கு வந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மகராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா போன்ற மக்கள் அடர்த்தி நிறைந்த மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோரால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களிடம் நடத்திய ஆய்வில் 90 சதவீதம் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரியவந்தது. வேறு மாநிலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டபோது கூட தமிழ்நாட்டில் கடந்த 8 மாதமாக உயிரிழப்பு ஏற்படாததற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததும் ஒரு காரணம் என்கிறார், அமைச்சர் மா. சுப்பிரமணியன்.