
அப்போலோ மருத்துவமனையின் சார்பில் சுவாச மண்டலம் குறித்த நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு அப்போலே மருத்துவமனையின் மூத்த சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் நெஞ்சக சிகிச்சைத் துறை மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், தடுப்பூசி, ஆஸ்துமா, இன்ப்ளூயன்சா பாதிப்பு மற்றும் சுவாச நோய்கள் குறித்துக் கலந்துரையாடினர்.
குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குப் பின்னர் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் தொற்றுகள் அதிகரித்து உள்ளதாகவும், தற்போது பரவிவரும் இன்ப்ளுயன்சா ஏ மற்றும் பி வகைகளின் காரணமாக இந்தத் தொற்று பாதிப்பு எளிதில் ஏற்படுவதாகவும் கூறி விவாதித்தனர். இதுபோன்ற பிரச்னைகளோடு வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் மிகவும் சவாலாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்த அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், ‘கொரோனாவின் தாக்கம் பல விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. வருங்காலத்தில் மருத்துவத் துறையின் பயன்பாட்டையும் இது நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கிறது. மேலும், இந்திய மருத்துவத் துறையில் சமீப காலங்களாக அதிகரித்துவரும் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவையாக உள்ளன’ என்றார்.
அதையடுத்து, சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன் மற்றும் தொற்றுநோய் பிரிவு மருத்துவர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் பேசியபோது, ‘பிசிஜி தடுப்பூசி பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே போடப்படுகிறது. காசநோய் தடுப்புக்காகப் போடப்படும் இந்தத் தடுப்பூசி குழந்தைகளுக்கு 5 முதல் 10 வயது வரை நோய்த் தாக்கம் அதிகரிக்காமல் இருக்கவும், மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. கொரோனா காலத்தில் பிசிஜி ஊசியை கொரோனா தடுப்பூசி பூஸ்டராகப் பயன்படுத்த முடியுமா என சோதித்துப் பார்த்ததில் அது பலனளிக்கவில்லை.
கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு சிலருக்கு உடல் சோர்வு, ஞாபக மறதி, சுறுசுறுப்பு இல்லாமை, நுரையீரல் கோளாறு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதைக் காண முடிகிறது. சர்க்கரை நோய் பிரச்னையும் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. இன்ப்ளூயன்சாவுக்கு பிறகு மாரடைப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில், கொரோனாவால் பாதிக்கப்படும்போது உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது” என்று அவர்கள் கூறினர்.