நவீன மீன் மார்க்கெட்டுக்கு மாநகராட்சி உத்தரவாதம்: நொச்சிக்குப்பம் மீனவர் போராட்டம் வாபஸ்!

நவீன மீன் மார்க்கெட்டுக்கு மாநகராட்சி உத்தரவாதம்: நொச்சிக்குப்பம் மீனவர் போராட்டம் வாபஸ்!

டற்கரை லூப் சாலைகளில் போடப்பட்ட மீன் கடைகளை அகற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் சாலையின் நடுவே படகுகளை நிறுத்தியும், அந்தப் படகுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி காவல்துறையுடன் இணைந்து நொச்சிக்குப்பம் லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு மீனவர்கள் நலனிலும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மீனவர்கள் நலனுக்காக போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், பொதுமக்கள் எளிதாக மீன்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் சென்னை மாநகராட்சியால் ரூபாய் 10 கோடி மதிப்பில் நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நவீன மீன் மார்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் வந்து செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. மீன் கடைகளின் மேற்கூரை சிந்தடிக் சீட்டால் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிப்பட்ட கடைக்கும் தண்ணீர் வசதியும், கழுவும் வசதியும் மின் வசதியும் செய்யப்படுகிறது. மேலும் கழிவுநீர் அகற்றும் வசதியும், கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணி ஆறு மாதத்தில் முடிவடையும்.

மீனவர்களின் நலனுக்காக தற்போது மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலையில் கிழக்கு பக்கம் வியாபாரம் செய்ய நீதிமன்றம் தெரிவித்தபடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீனவர்களின் நலன் கருதி நொச்சிக்குப்பம் லூப் சாலையின் மேற்குப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி உள்ள இடத்தில் மீனவர்கள் மீன் விற்பனை செய்ய எளிதாக இருக்கும் வகையிலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தினை காத்திடும் வகையிலும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சென்னை மாநகராட்சி சார்பில், உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நொச்சிக்குப்பம் பகுதியில் திங்கள்கிழமை முதல் நடந்துவந்த போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்று இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com