கட்டட விதிமீறல் விவகாரம்: மாநகராட்சி நோட்டீஸ்!

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

கட்டட விதிமீறல்களை அனுமதித்து விட்டு, பின் அவற்றை வரன்முறை செய்வதற்கு பதில், நகரமைப்பு சட்டத்தை திரும்ப பெற்று விடலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், அனுமதி பெறாமல் மூன்றாவது மாடி கட்டியதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, அதே குடியிருப்பில் வசிக்கும் விஜயபாஸ்கர் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விதிமீறல்களை கட்டுப் படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டிருந்தது. பின், அவர் ஆஜராக விலக்கு அளித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதற்கிடையில், வழக்கு தொடர்ந்த மனுதாரரே, குடியிருப்பு பகுதியை வணிக பயன்பாட்டுக்கு விட்டதாகவும், திட்ட அனுமதி மீறி கழிப்பறை கட்டியதாகவும் கூறி, தரைத்தளம் மற்றும் முதல் தளத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

சீல் அகற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் தரப்பில் முறையிடப்பட்டது

இதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், குமரேஷ்பாபு அடங்கிய அமர்வு, '25 ஆண்டுகளாக கும்பகர்ணன் போல் தூக்கத்தில் இருந்த மாநகராட்சி நிர்வாகம், கமிஷனரை ஆஜராகும் படி உத்தரவிட்டதும், எப்படி என புரிந்து கொள்ள முடிய வில்லை' என தெரிவித்தது.

‘சீல்' வைத்த போது, அங்கு இருந்த மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பெயர்களை தாக்கல் செய்ய, மாநகராட்சி கமிஷனருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி கமிஷனர் தரப்பில், மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சம்பந்தப் பட்ட கட்டடத்துக்கு சீல் வைப்பது குறித்து ஏற்கனவே 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது என்றும் கூறப்பட்டது.

சீல் வைத்தபோது இருந்த அதிகாரிகளின் பெயர்களும், மனுவில் குறிப்பிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, தற்போது சீல் அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், 'சென்னை, கிரீன்வேஸ் சாலை அருகில் விதிமீறல் கட்டடங்கள் இருப்பதாகவும், முதலில் விதிமீறல்களை அனுமதித்து விட்டு, பின் வரன்முறை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

'இதற்கு பதில், விரும்பியபடி கட்டுமானங்கள் மேற்கொள்ள நகரமைப்பு சட்டத்தை திரும்ப பெற்று விடலாம்' என்றனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, விதிமீறல்களை சரி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், விசாரணையை இரு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com