

கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா, “லிங்காயத்து சமூகத்தின் ஊழல் முதல்வர்” என்று குறிப்பிட்டு பேசியது சரியானதுதான் என்று சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
சித்தராமையா தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையைத்தான் அவ்வாறு ஊழல் முதல்வர் என்று குறிப்பிட்டுள்ளாரே தவிர அனைத்து லிங்காயத்து முதல்வர்களையும் அவர் குறிப்பிடவில்லை என்றும் ஷெட்டர் கூறியுள்ளார்.
லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த முதல்வர்கள் ஊழல் பேர்வழிகள் என்று கூறியதற்காக முன்னாள் முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கோரியுள்ளார். அவரது பேச்சு கர்நாடகத்தைச் சேர்ந்த லிங்காயத்து சமுதாயத்தினரை புண்படுத்துவதாகவும் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.
லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த முதல்வர்கள் ஊழல் பேர்வழிகள் என்று சித்தராமையா கூறியுள்ளது கண்டனத்துக்குரியது. இது கர்நாடக மக்களை அவமானபடுத்துவதாகும். எனவே
சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.
லிங்காயத்து சமூகத்தினரை ஊழல் பேர்வழிகள் என்று குறிப்பிட்டவர்கள் இப்போது விளக்கம் என்ற பெயரில் திசைத் திருப்ப முயல்கிறார்கள். அவர்கள் மனதில் நினைப்பது வெளிவந்துவிட்டது என்றும் ஜோஷி மேலும் கூறினார்.
லிங்காயத்து சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசுவதன் மூலம் பா.ஜ.க. மீது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சியினர் முயல்கின்றனர் என்றும் ஜோஷி குறிப்பிட்டார்.
இதனிடையே பா.ஜ.க.விலிருந்து லிங்காயத்து தலைவர்கள் பலர் வெளியேறிவிட்டனர் என்றும் லிங்காயத்து சமூகத்தினர் ஏற்கெனவே இனி பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டனர் என்றும் ஜெகதீஷ் ஷெட்டர், குறிப்பிட்டுள்ளார்.
ஹவேரி மாவட்டம் பையதாகி எனது தொகுதி அல்ல. அந்தப் பகுதியில் போட்டியிடும் காங்கிரஸ்காரர்கள் பலர் என்னை தேர்தல் பிரசாரத்திற்கு வருமாறு அழைக்கின்றனர். லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்கள் பலர், கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேரப்போவதாக தெரிவித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தொண்டர்களும் காங்கிரஸில் இணைய உள்ளனர் என்றார் ஜெகதீஷ் ஷெட்டர்.
ஆளும் பா.ஜ.க.விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள இரண்டாவது லிங்காயத்து சமூகத் தலைவராவார் ஷெகதீஷ் ஷெட்டர். முன்னதாக கர்நாடக முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவாதி காங்கிஸில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஷெட்டருக்கு எதிராக மகேஷ் தென்கின்காய் என்பவரை களத்தில் இறக்கியுள்ளது பா.ஜ.க.
மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.