ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவிடம், வேலைக்கு-நிலம் ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ சுமார் இரண்டு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.
லாலுவின் மகள் மிஸா பாரதி வீட்டீல் இந்த விசாரணை நடந்தது. விசாரணை அனைத்தும் விடியோவாக பதிவு செய்யப்பட்டபின் அதிகாரிகள் விசாரணை முடிந்து வெளியேறினர்.
இந்த விசாரணையின்போது லாலுவின் மகள் மிஸா பாரதியும் உடன் இருந்தார். லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது நிலத்தை இலவசமாக கொடுத்தவர்கள் அல்லது குறைந்த விலைக்கு கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
திங்கள்கிழமை லாலுவின் மனைவியும், பிகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடம் அவரது வீட்டில் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்திய நிலையில் செவ்வாய்க்கிழமை லாலுவிடம் விசாரண நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ அதிகாரிகள் காலை 10.40 மணி அளவில், பண்டாரா பார்க் பகுதியில் உள்ள மிஸா பாரதியின் வீட்டிற்கு வந்தனர். அங்குதான் லாலு இப்போது இருந்து வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பாக லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் 14 பேர் மீது சிபிஐ ஏற்கெனவே குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இவர்கள் அனைவரையும் மார்ச் 15 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தது.
மேல் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாலு மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி மீது சிபிஐ புதிதாக விசாரணை நடத்தியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பா.ஜ.க.வை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதால் சிபிஐ எங்கள் குடும்பத்தினர் மீது அடிக்கடி விசாரணை நடத்தி வருகிறது என்று பிகார் துணை முதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வை எதிர்ப்பவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகும். பா.ஜ.க.வுக்கு உடன்படுபவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் எதிர்ப்பவர்களை ஒடுக்குவதும்தான் விசாரணை அமைப்புகளின் வேலை என்று தேஜஸ்வி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
எதையாவது வாங்கிக் கொண்டு வேலை கொடுப்பதற்கு ரயில்வே அமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததால்தான் அவரை மத்தியில் உள்ள ஆளுங்கட்சியினர் குறிவைக்கிறார்கள் என்று தேஜஸ்வி குறிப்பிட்டார்.
லாலுவும் அவரது குடும்பத்தினரும் வளைந்து கொடுக்கவில்லை என்ற காரணத்தால்தான் அவர்களை ஆளுங்கட்சியினர் விசாரணை என்ற பெயரியில் கொடுமைபடுத்தி வருகின்றனர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை என்ற பெயரில் கொடுமைபடுத்துவது தவறானது என்று ஆம் ஆத்மி அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.