தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்குத் தடை.. புற்று நோயை உண்டாக்கும் வேதிப் பொருள் இருக்கிறதா?

Cotton candy banned in Tamil Nadu
Cotton candy banned in Tamil Nadu

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

பஞ்சுமிட்டாய் பலருக்கும் பிடித்தமான பொருளாக இருக்கும் மிட்டாய் வகைகளுள் ஒன்றாகும். வயதுவரம்பற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலம் காலமாக இதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். ஒவ்வொருவரின் பள்ளிப்பருவத்திலும் சாலைகளில் விற்கும் இந்த மிட்டாயை வாங்குவதற்காக அடித்து பிடித்து ஓடிய நாட்களெல்லாம் பொன்னான நாட்களே. இதன் தன்மை மற்றும் சுவையை விரும்பி சாப்பிட்டவர்களால் மறக்கவே முடியாது.

இந்நிலையில் தமிழக அரசு தற்போது பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை என்ற  அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுருக்கிறது.

புதுச்சேரியில் தடை:

புதுச்சேரியில் பல நிறங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவல்களின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதனை பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். அவ்வாறு நடந்த சோதனையின் முடிவில் புற்றுநோயை உண்டாக்கும் ‘ரோடமைன் பி’ என்ற வேதிப் பொருள் சேர்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் தடை:

தமிழகத்தில் மெரினா கடற்கரை மற்றும் பூங்கா  போன்ற பஞ்சுமிட்டாய்கள் அதிகம் விற்கப்படும் இடங்களில் அதனை பறிமுதல் செய்து சோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை இனி தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

இரசாயன சேர்க்கை:

பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில், ‘ரோடமைன் பி’ (Rhodaminbe-B) என்ற செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ‘ரோடமைன் பி’  என்பது ஒரு இரசாயான கலவை. இது துணிகளின் சாயத்திற்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும்.   இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 பிரிவு 3(1) (zx) பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii) & (ix) மற்றும் பிரிவு 26(1) (2) (i) (ii) & (v)- ன்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தண்டனைக்குரிய குற்றமாகும்:

 ‘ரோடமைன் பி’ கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பார்சலுக்குப் பயன்படுத்துதல், இறக்குமதி இல்லையேல் விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

இது குறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க, உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையரால் அனைத்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது அறிக்கையில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இனி தமிழ்நாட்டிலும்  பஞ்சு மிட்டாய் விற்பனை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com