நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் இன்று முதன்முதலாக டிஜிட்டல் கரன்சி வெளியிடவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, நாட்டில் காகித பணத்திற்கு மாற்றாக விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப் படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், இன்று நாடு முழுவதும் முதன்முதலாக டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது. இந்த டிஜிட்டல் கரன்சி தயாரிப்பதற்கு செலவு ஏதும் இல்லை என்பதுடன், நாட்டில் கறுப்புப் பணம், மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க முடியும் என்று கருதப் படுகிறது. அந்த வகையில் ஸ்வீடன் உள்ளிட்ட 9 நாடுகளில் ஏற்கெனவே டிஜிட்டல் நாணயம் பயன்பாட்டில் உள்ளது.
-இதுகுறித்து ரிசர்வ வங்கி தெரிவித்ததாவது;
இன்று வெளியிடப்பட உள்ள டஜிட்டல் கரன்சியை அரசுப் பத்திரங்கள், பங்கு பரிவர்த்தனை போன்றவற்றில் முதற்கட்டமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில், சில்லறை வர்த்தக அளவில் இந்த கரன்சியின் பயன்பாட்டை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த டிஜிட்டல் கரன்சிகள் முதன்முதலில் எஸ்பிஐ வங்கி, பரோடா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட 9 வங்கிகளில் அறிமுகப் படுத்தப்படும்.
-இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.