அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி!

மலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் இடைக்கால ஜாமீன் கோரப்பட்டது. அதேசமயம் அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி காணொளி மூலம் ஆஜரானார்.

அப்போது நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியிடம் கைது செய்யப்பட்டபோது நடந்தது குறித்து கேட்டார். காலை முதல் இரவு வரை அமலாக்கத்துறையில் தன்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்துக் கூறினார் செந்தில் பாலாஜி. அதைத் தொடர்ந்து, ‘அமலாக்கத்துறையினரின் மனு நகல் உங்களுக்குக் கிடைத்ததா?’ என்று கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி கிடைக்கவில்லை என்று கூற, அந்த மனுவை கையொப்பமிட்டுப் பெற்றுக்கொள்ளும்படி கூறினார்.

அதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இளங்கோ, “13ம் தேதி காலை 7 மணியிலிருந்து 14ம் தேதி வரை அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதனால், மீண்டும் அமலாக்கத்துறையினரின் காவலுக்கு அனுமதிக்கக்கூடாது” என்று வாதிட்டார். அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர், ‘விசாரணை தொடர்ந்ததில் இருந்து தாங்கள் தடுக்கப்பட்டதாகவும், வழக்கில் தொடர்புடைய தொகை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். சோதனையின்போது எங்களுக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு தரவில்லை’ என்றும் கூறினர். அதையடுத்து, விசாரணைக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அமலாக்கத்துறை ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் வழக்கறிஞர் இளங்கோ வாசித்துக் காண்பித்தார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்ற மனுவும், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையினரின் மனுவும் விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது. இன்றிலிருந்து 23ம் தேதி மாலை வரையிலான 8 நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், செந்தில் பாலாஜியை மருத்துவமனையிலேயே வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும் விசாரணையின்போது ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி அல்லி தனது தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com