யார் இந்த சங்கரய்யா? 90 ஆண்டுகால மக்கள் விடுதலை போராட்டத்தில் அவரின் பங்கு என்ன?

என்.சங்கரய்யா
என்.சங்கரய்யா
Published on

விடுதலை போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவருமான என்.சங்கரய்யா தனது 102-வது வயது இன்று காலமானார். தமிழ்நாட்டில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களில் வாழும் வரலாறாக இருந்துவந்தவர் தோழர் என்.சங்கரய்யா. தன்னுடைய 102 வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள என்.சங்கரய்யா கடந்த வந்த வரலாற்று பாதையை தெரிந்துக்கொள்வோம்.

பகத்சிங்கிற்காக  9 வயதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்

1922 –ம் ஆண்டு ஜூலை 15 அன்று பிறந்த சங்கரய்யா இளம் வயது முதலே பொதுநல நோக்கோடு செயல்படத் துவங்கினார். விடுதலை போராட்டத்தின் போது 1931-ம் ஆண்டு மார்ச் 23 அன்று பிரிட்டிஷ் அரசால் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் உள்ளிட்டவர்கள் தூக்கிலடப்பட்டுக் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் போராட்ட அலையை ஏற்படுத்தியது. அப்போது ஒன்பது வயதே நிரம்பி இருந்த சங்கரய்யா தனது அண்ணனுடன் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

சுயமரியாதை இயக்கத்தின் மீதான தனது தாத்தாவின் ஈடுபாட்டால் பெரியாரின் “குடியரசு” இதழை வாசிக்கும் வாய்ப்பை பெற்றார். அது இளம் வயதிலேயே முற்போக்கான கருத்துக்களை அவருள் விதைத்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயிலும்போது கல்லூரியின் மாணவர் மன்ற இணைச் செயலாளராக இருந்துள்ளார். அக்காலத்தில் ராஜாஜியை அழைத்து கல்லூரியில் கூட்டம் நடத்தியுள்ளார். அதே ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்ட நிலையில் இந்தி திணிப்பை முன்வைத்தபோது அதை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்திலும் சங்கரய்யாக முன்னின்றார். இந்தித் திணிப்பிற்கு எதிராக நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

விடுதலை  போராட்டத்தில் சங்கரய்யா!

காங்கிரஸ் தலைமையில் மதுரையில் நடைபெற்ற ஆலய நுழைவு போராட்டத்திலும் மாணவர்களோடு சென்று போராட்ட எழுச்சியை கண்டுணர்ந்தார். 1938 –ல் தேச விடுதலை போராட்டத்தின் எழுச்சியின் தொடர்ச்சியாக மதுரையில் மாணவர் இயக்கம் துவங்கப்பட்டது. அதன் செயலாளராக சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்கிற பெயரில் காங்கிரசிற்குள்ளாகவே செயல்பட்டுவந்தது. 1939-ம் காலகட்டத்தில் அவர்களுடன் சங்கரய்யாவிற்கு ஏற்பட்ட தொடர்பு அவரை கம்யூனிசத்தை நோக்கி நகர்த்தியது. 1940 –ம் ஆண்டு மதுரையில் துவங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையில் சங்கரய்யா தன்னை இணைத்துக்கொண்டார்.

என்.சங்கரய்யா
என்.சங்கரய்யா

1941 –ல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மாணவர்களைக் காவல் துறை கடுமையாகத் தாக்கியது. இதைக் கண்டித்து சங்கரய்யா தலைமையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெறும் போராட்டம் நடைபெற்றது. மதுரை முழுவதும் போராட்டம் பரவியது. அதையடுத்து சங்கரய்யா கைது செய்யப்பட்டு 16 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பி.ஏ இறுதி தேர்வுக்கு பதினைந்து நாட்களே இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் அவரின் கல்லூரி படிப்பு முற்றுப்பெற்றது.

விடுதலைக்கு முன்பும் பின்பும் 8 ஆண்டுகள் சிறை

1946 –ல் டிசம்பரில் மதுரையில் செயல்பட்டுவந்த பிரிட்டிஷ் மில் தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்றது. அப்படியான போராட்டங்களை ஒருங்கிணைத்த கம்யூனிஸ்ட்டுகளை முடக்கும் நோக்குடன் மதுரை சதி வழக்கு போடப்பட்டு பல கம்யூனிஸ்ட்டுகளைப் பிரிட்டிஷ் அரசு சிறையில் அடைத்தது. இச்சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சங்கரய்யா இந்தியத் தேசம் விடுதலை அடைவதற்கு முந்திய நாள் வரை சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தனர்.

விடுதலைக்கு முன்பும் பின்பும் மக்கள் நலன் சார்ந்த போராட்டத்தின் ஈடுபட்டதற்காக சங்கரய்யா எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். காவல் துறையில் கண்ணில்படாமல் மக்கள் பணியாற்றும் வகையில் தலைமறைவாக மூன்றாண்டுகள் செயல்பட்டுள்ளார். 1967, 1977, 1980 என மதுரையிலிருந்து மூன்று முறை தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுச் செயல்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவின்போது புதிதாகத் துவக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சிக்கு அடித்தளமிட்டவர்களில் சங்கரய்யாவும் ஒருவர்.

பிற்காலத்தில் அக்கட்சியின் தமிழக மாநிலச் செயலாளராக சங்கரய்யா செயல்பட்டார். அதன் மத்திய கட்டுப்பாட்டுக்குழுவின் தலைவராக செயல்பட்டுள்ளார். தனது 98-வது பிறந்த தினம் வரை அக்கட்சியின் ஈர்ப்பு மிகுந்த பேச்சாளராக சங்கரய்யா இருந்தார். வயது மூப்பின் காரணமாகவும் கொரோனா கால நெருக்கடியும் அவரை கொஞ்சம் முடக்கியது. கொரோனா நெருக்கடி பிறகு 2019ல் நடைபெடற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, தோழர் சங்கரய்யாவுக்கு ’தகைசால் தமிழர்’ விருது வழங்கி கௌரவித்தது. அப்போது அரசு சார்பில் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் நன்கொடை, சங்கரய்யா மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிதி உதவி திட்டத்திற்கு வழங்கினார்.

அவரின் இந்த செயல் அவரை ’தகைசால் தமிழர்’ என்ற பட்டத்திற்கு ஏற்றவர் என்பதை மெய்பித்தது. அதேபோல், என்.சங்கரய்யாவில் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். திராவிட சித்தாந்தம், கம்யூனிச சித்தாந்தம் என கொள்கைகளில் மாறுபட்ட கருத்துக்கொண்டிருந்தாலும், முதலமைச்சர் ஸ்டாலின் போல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர் தோழர் என்.சங்கரய்யா மீது அளவற்ற மரியாதையும் அன்புமும் கொண்டிருந்தனர்.

நாட்டின் விடுதலை போராட்டத்திற்காக தன்னுடைய 9 வயதில் இடது கை முஷ்டிய உயர்த்திய தோழர் என். சங்கரய்யா, தன்னுடைய 90 ஆண்டுகால வாழ்க்கையில் நாட்டின் விடுதலைக்காவும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களின் விடுதலைகாகவும் பாடுப்பட்டுள்ளார். நூற்றாண்டுகளை கடந்த தோழர் என். சங்கரய்யா தன்னுடைய 102 வயதிலும் மக்களுக்காக சொன்ன விஷயம் என்றால் அது, “இன்றைய எல்லா நெருக்கடிகளிலிருந்தும் மீள்வதற்கான ஒரே வழி கம்யூனிசம்தான்; அது நிச்சயம் அது வெல்லும்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com