தோழர் சங்கரய்யாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

தோழர் சங்கரய்யா
தோழர் சங்கரய்யாstatic.hindutamil.in
Published on

சுதந்திர போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா உடல் நலக்குறைவுகாரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்னும் இரண்டு மூன்று நாள்கள் மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை எடுத்துக்கொள்வார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் தோழர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கட்சியின் மாநிலக்குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று தோழர் என்.சங்கரய்யா அவர்களை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர். தோழர் சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் உள்ள சங்கரய்யா, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் தொடங்கிய போது அதில் அங்கம் வகித்த 36 பேரில் ஒருவர். சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள், தேசியத் தலைவர்கள் என பலருடனும் நேரடி தொடர்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற முதலாம் ஆண்டு, தமிழ்நாட்டின் வாழும் வரலாறாக உள்ள தோழர் சங்கரய்யாவுக்கு ’தகைசால் தமிழர்’ விருது மற்றும் 10 லட்சம் ரூபாய் வழங்கியது. ஆனால், தனக்கு வழங்கப்பட்ட நிதியுதவியை முதலமைச்சர் கொரோன நிவாரண நிதிக்கு வழங்கினார் தோழர் சங்கரய்யா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com