ஜி.பி.எஸ் உடன் வலம் வரப்போகும் குப்பை எடுக்கும் வாகனங்கள் – சேலம் மாநராட்சியில் துவக்கம்.

ஜி.பி.எஸ் உடன் வலம் வரப்போகும் குப்பை எடுக்கும் வாகனங்கள் – சேலம் மாநராட்சியில் துவக்கம்.
Published on

ரோட்டுல போற வர வண்டிகளுக்கெல்லாம் ஜிபிஎஸ் இருக்க எங்க வண்டிங்களுக்கு மட்டும் இல்லைனா எப்படி? தினம் காலையில் நம் வீட்டுக் குப்பைகளை சுத்தம் செய்ய வரும் துப்புரவுப் பணியாளர்களின் ஆதங்கம் இனி இருக்காது.


சேலம் மாநகராட்சியில் ரூபாய் 45 லட்சத்தில் அனைத்து குப்பை எடுக்கும்  வாகனங்களுக்கு ஜிபிஎஸ்  கருவி பொருத்தும் பணி துவங்கியது . முதற்கட்டமாக சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள துப்புரவு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.

      சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் சுமார்  550 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. வீடு தோறும் வாகனங்களில் பெறப்படும் குப்பையானது மக்கும் குப்பை  மக்காத குப்பை என பிரித்து வாங்கப்படுகிறது. வாங்கப்படும் குப்பை வாகனங்களிலேயே நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரம் தயாரிக்க பயன்பட்டு வருகிறது இந்தப் பணிகளை 141 வாகனங்கள் செய்து வருகிறது. குப்பை எடுக்கும் வாகனங்களிலும்  ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள் மாநராட்சியில் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சுகாதாரத்துறையில் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்கப்படும் என சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

     இதனிடையே 15 வது நிதி குழுவில் சுகாதாரத் துறையில் 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூபாய் 10 கோடியில்  75  புதிதாக குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் இந்த வாகனங்கள் பிரித்து அனுப்ப வைக்கப்பட்டுள்ளது . மேலும்  சுகாதார துறையில் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் ரூபாய் 45 லட்சத்தில் கருவி பொருத்தும் பணி துவங்கியது.

    அதன்படி சூரமங்கலம் மண்டலத்தைத் தொடர்ந்து அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட உள்ளது. இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில் “மாநகரில்  அனைத்து குப்பை அள்ளும் வாகனங்களிலும் ஜி பி எஸ் கருவி பொருத்தப்படுகிறது. இதற்கான பணி தொடங்கியுள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தினால் குப்பை அள்ளும் வாகனம் எங்கு உள்ளது என்று கண்டறியப்படும்” என்றார்.

      இது உண்மையில் நல்ல திட்டம். இனி சாலையோரமாக வண்டியை நிறுத்தி விட்டு ஓய்வு எடுக்கும் சில கடமை மறந்த பணியாளர்கள் பணியில் ஒழுங்காக ஈடுபடுவார்கள். அதுமட்டுமின்றி அதிகாரிகள் குப்பை வண்டி எங்கு செல்கிறது எங்கு வருகிறது என்று கண்காணிக்க பெரும் உதவியாக இருக்கும் இந்த ஜி.பி.எஸ். கருவி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com