உயிர் பலி வாங்கும் விபரீத செல்ஃபி சாகசங்கள்.

உயிர் பலி வாங்கும் விபரீத செல்ஃபி சாகசங்கள்.
Published on

ளம் ரத்தம் துடிப்பது சரிதான். ஆனால் ஆபத்தை அறிந்தும் அறிவை இழந்து வலியச் சென்று தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் செல்ஃபி மோகத்தை என்னவென்று சொல்ல? இதோ மனம்  வேதனையுறும் செல்பி மரணங்களின் செய்திகள்.
     கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் 23 வயது இளைஞர் சுமன். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.  சுமன் தனது நண்பர்களுடன் திருப்பதியை அடுத்த எர்ராவாரிப் பாளையம் பகுதியில் உள்ள தலக்கோணம் நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு பாறை மீது ஏறி நின்று நீர்வீழ்ச்சியில் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுக்கும்படி தனது நண்பர்களிடம் கூறியதால்  நண்பர்கள் சுமனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது பாறையின் மேலிருந்து நீர்வீழ்ச்சியில் சாகசம் செய்வதுபோல் சுமன் குதித்துள்ளார்.

      அப்போது எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியின் அடியில் இருந்த இரண்டு பாறைகளுக்கு நடுவே சுமன் சிக்கிக்கொண்டார். இது குறித்து சக நண்பர்கள் போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தந்ததால் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இரவாகிவிட்டதால் தேடும் பணியை நிறுத்தினர். நேற்று முன் தினம் காலை மீண்டும் தேடும் பணியை தொடங்கி இரண்டு பாறைகளுக்கு இடையே சிக்கிய சுமனை பிணமாக மீட்டுள்ளனர். தற்போது தலக்கோண நீர்வீழ்ச்சியில் பாறை  மீதிருந்து நீரில் சுமன் குதித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.  

     டுத்த சம்பவம் திருப்பூரில் தண்டவாளம் அருகில் நின்று செல்பி எடுக்க முயன்ற இரண்டு வாலிபர்கள் ரயில் மோதி பலியான சம்பவம்.

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே வாலிபர்கள் இரண்டு பேர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நடந்து விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ரயில் மோதி இறந்த இரண்டு பேர் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 22) விஜய் (வயது 25) என்பது தெரியவந்தது அவர்கள் இருவரும் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன் விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இரண்டு பேரும் மட்டும் ரயில் வரும்போது ரயிலுடன் சேர்ந்து செல்பி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவளத்தை ஒட்டி நின்றுள்ளனர். அப்போது திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீதும் மோதியுள்ளது. இதில் பாண்டியன் விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த இரு சம்பவங்களிலும் அந்த இளைஞர்களுடன் வந்த நண்பர்கள் அவர்களின் உடல்களைப் பார்த்து கதறி அழுதுள்ளனர். அவர்கள் மட்டுமா? படித்து பெரிய நிலைக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பைத் தருவான் என்ற கனவுகளுடன் இருந்த அவர்களின் பெற்றோரும் எவ்வளவு பெரிய மனத்துயரை அடைந்திருப்பார்கள்.

     இனி ஒவ்வொரு தண்டவாளங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள், பாறைகள் உள்ள இடங்கள் என அனைத்திலும் செல்ஃபி எடுக்கத் தடை என்று அறிவித்தால் என்ன? இப்படிப்பட்ட இளைஞர்கள் செல்ஃபி எடுக்கும் முன் கொஞ்சமாவது நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் நினைத்துப்பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com