அண்மையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் ஹரியாணா மாநிலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சந்தீப் சிங் மீது பெண் தடகள பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதை அடுத்து அவர் பதவி விலக நேர்ந்தது. மேலும் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹாக்கி வீரர்ராக இருந்து பின்னர் அரசியலில் சேர்ந்து அமைச்சரான அவர் மீது ஐந்து வழக்குகள் உள்ளன. அவருக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க ஹரியாணா அரசு மூவர் கொண்ட புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.
தம்மீதான அடுக்கடுக்கான புகார்களை சிங் மறுத்துவந்துள்ளார். மேலும் தமது புகழை கெடுக்க முயற்சிகள் நடப்பதாகவும் அவர் கூறியிருந்தார். முதல்வர் கட்டாரும், அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தவிர அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை என்று அவருக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
மகளிர்க்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டது சந்தீப் சிங் ஒருவர் மட்டும் அல்ல. இந்திய அரசியல்வாதிகள் அவர்களது வாரிசுகள் என பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி 13 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குல்ஹானே என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 13 வயது சிறுமையை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ரமேஷ் குல்ஹானே சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டது இது முதல் முறையல்ல, பலமுறை அச்சிறுமியை அழைத்து முறைதவறி நடந்து கொண்டதுடன் அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடாதே என்றும் கேட்டுக் கொண்டாராம்.
பாலியல் ரீதியில் நீண்டநாள் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த பெண் ஒரு நாள் இந்த தகவலை குடும்பத்தினரிடம் தெரிவிக்கவே, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் அந்த பா.ஜ.க. பிரமுகர் போலீசிடம் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. தார் மாவட்டம், கந்த்வானி தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. உமா சிங்ஹர். இவர் தனது ஐந்தாவது மனைவியிடம் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு பின் அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு ஆபாச விடியோக்களை காட்டி மிரட்டி வந்தாராம் அந்த எம்.எல்.ஏ. மேலும் கடந்த அக்டோபர் மாதம் மனைவியை கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் அவரை விரைந்து சென்று கைது செய்ய முயன்றனர். ஆனால், அவர் வீட்டிலிருந்து தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகனான தீபக் மீனா, கடந்த 2021 பிப்ரவரியில் 15 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஏல்.ஏ. மகன், அந்த பெண்ணை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததுடன், அதை விடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த பெண் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் தீபக் மீனாவை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
தீபக் மீனாவின் தந்தை ஜோஹர்டி லால் மீனா, ஆல்வாரில் லக்ஸம்கர்க் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 9 அரசியல்வாதிகள் மீது வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் வேதனை அளிக்கும் விஷயம் என்னவெனில், கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்கியிருப்பவர்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதுதான்.
இதிலிருந்து எழும் கேள்வி என்னவென்றால்.நமது நாட்டில் சட்டங்கள் போதவில்லையா அல்லது அவை முழுமையாக செயல்படுத்தப்படவில்லையா என்பதுதான். வேலியே பயிரை மேய்ந்தால் நாம் யாரிடம் முறையிடுவது.