

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நேர்மையுடன் மக்கள் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசியல் விதி. நேர்மை என்பதன் அர்த்தம் அவர்கள் எவ்வித தவறான வழிமுறைகள் மற்றும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கும் நல்தகுதி உள்ள மனிதர்களாக மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்பதே.
ஆனால் தற்போது உள்ள அரசியல் கட்சிகளில் சிலர் குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் நலப் பதவிகளை வகிப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது எனலாம். ஆம் தமிழ்நாட்டில் கட்சி பாகுபாடின்றி 126 புதிய எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் என்ற அதிரடித் தகவல் அனைவருக்கும் கவலையைத் தந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி அரசு பதவியேற்றது. மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டசபையில் எம்எல்ஏவாக பதவியேற்ற நிலையில் அதில் உள்ள 126 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ஏ. டி. ஆர்) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் குற்றப் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது .ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களில் எத்தனை கோடீஸ்வரர்கள்? குற்ற வழக்குகள் உள்ளவர்கள் எத்தனை பேர் ? எத்தனை பட்டதாரிகள்? போன்ற புள்ளிவிவர அறிக்கைகளை ஆய்வு செய்து டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு வெளியிடும்.
அவை ஊடகங்களிலும் அதிகம் பேசப்படும்.இந்தியாவில் தேர்தல் மற்றும் அரசியல் வெளிப்படைத்தன்மைக்காக செயல்படும் ஒரு முக்கிய அரசு சாரா அமைப்பாக இது செயல்படுகிறது. குறிப்பாக மக்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும் வேட்பாளர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம், குற்ற வழக்குகள் போன்ற தகவல்களை வெளிப்படுத்துகிறது. மேலும்
தேர்தல் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் வழக்குகள் தொடர்வதுடன் அரசியல் கட்சிகளின் நிதி வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் இன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள். தங்கள்சொத்து விவரம் ,குற்றப் பின்னணி,கல்வித்தகுதி ஆகியவற்றை கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என்ற முக்கிய மாற்றத்திற்கு இந்த அமைப்பு முன்னெடுத்த சட்டப் போராட்டங்கள் காரணமாகியது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பு ஆராய்ந்து அளித்துள்ள தகவல்தான் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 எம்எல்ஏக்களில் 126 பேர் மீது அதாவது 54 சதவிகிதத்தினர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலவையில் இருப்பதாக சொல்லப்படும் செய்தி. இதில் கட்சிகள் வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக தவெகவின் 107 எம்எல்ஏக்களில் 41 பேர் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் திமுகவின் 39 பேரில் 37 பேர் , அதிமுகவின் 47 பேரில் 33 பேர், காங்கிரஸின் 5 ல் 3 பேர் என்ற தகவல்களை பட்டியலிடுகிறது.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியில் வெற்றி பெற்ற 4 பேர் மீதும் வழக்குகள் உள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் வெற்றி பெற்ற தலா இருவர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளில் தலா ஒருவர், அமமுக , தேமுதிக கட்சிகளில் வெற்றி பெற்ற இருவர் மீதும் வழக்குகள் உள்ளதாக தங்கள் பிரமாண பத்திரங்களில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 56 பேர் மீது 24 சதவீதம் கடுமையான குற்ற வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் தவெகவின் 19 பேர் , திமுகவின் 14 பேர், அதிமுகவின் 14 பேர், காங்கிரசை சேர்ந்த 2 பேர் கடுமையான வழக்கை எதிர்கொண்டுள்ளனர் . அவர்களில் ஒருவர் மீது கொலை வழக்கு ,ஆறு பேருக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு ,இரண்டு பேருக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுவது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
ஊழல் மற்றும் குற்றங்களுக்கு எதிரான ஆட்சி வேண்டும் என்ற ஆர்வத்துடன் மாற்றம் வேண்டும் என ஆராய்ந்து வாக்களித்த மக்களுக்கு குற்றத்தை தடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ளவர்களே குற்றங்களை செய்தவர்கள் எனும் இந்த தகவல் நிச்சயமாக பெரும் ஏமாற்றம் தரும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.