ராஜஸ்தான் காங்கிரஸில் நெருக்கடி: புதிய கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்?

ராஜஸ்தான் காங்கிரஸில் நெருக்கடி: புதிய கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்?

வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தமது மூன்று கோரிக்கைகள் மீது முதல்வர் அசோக் கெலோட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் உறுதியாக இருக்கிறார்.

தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் வராத நிலையில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவும் பைலட் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி மேலிடம் கடந்த வாரம் அவர்கள் இருவரையும் தில்லிக்கு அழைத்தது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்த்து. தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் ஒன்றுபட்டு உழைக்குமாறும் பிரச்னைகளை அதன் பின் பார்த்துக் கொள்ளலாம் என அறிவுரை கூறியது.

கெலோட், பைலட் இருவரும் மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு வந்தாலும் அவர்களுக்குள் புகைச்சல் நீடிக்கிறது என்றே தெரிகிறது.

முதல்வர் அசோக் கெலோட், பைலட்டின் கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வரும் ஜூன் 11 ஆம் தேதி, டெளசாவில் நடைபெறும் தந்தையின் நினைவுநாளில் புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை பைலட் வெளியிடலாம் என்று தெரிகிறது.

சச்சின் பைலட் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. அவர் வசுந்தரா ஆட்சி மீதான ஊழல் நடவடிக்கை உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்தி வருகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், ராஜஸ்தான் மாநில பணியாளர் தேர்வாணயத்தை திருத்தி அமைத்து புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும், தேர்வு ரத்தானதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதுதான் அவரது மூன்று கோரிக்கைகள். (வசுந்தரா ராஜே மீது கெலோட் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அவருடன் ரகசிய பேரம் நடத்தியுள்ளதாக பைலட் குற்றஞ்சாட்டுகிறார்.)

இந்த நிலையில் மறைந்த தந்தை ராஜேஷ் பைலட்டின் நினைவுநாளை விரிவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை பைலட் செய்து வருகிறார். இந்த பணிகளை அவருக்கு நெருக்கமானவரும் வேளாண்துறை அமைச்சருமான முராரி லால் மீனா மேற்பார்வையிட்டு வருகிறார்.

பைலட், புதிய அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை தந்தையின் நினைவுநாளில் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், அப்படியொரு திட்டம் ஏதும் இல்லை. இந்த வதந்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்கிறார் முராரி லால் மீனா.

இந்த நிலையில் காங்கிரஸ், கட்சி மேலிடம்தான் அதிகாரம் படைத்தது. ராஜஸ்தான் தேர்தலில் நாங்கள் ஒற்றுமையுடன் போராடி வெற்றிபெறுவோம் என்று கூறியுள்ளது. காங்கிரஸ் மேலிடத்தில் சமரச முயற்சி நடந்தாலும் பைலட் தனது கோரிக்கையிலிருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதுமுதலே அசோக் கெலோட், பைலட் இருவரிடையே மோதல் தொடங்கிவிட்டது. 2020 ஆம் ஆண்டு ச்ச்சின் பைலட் கெலோட் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதையடுத்து அவர் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு தலைமையில் மாற்றம் கொண்டுவர காங்கிரஸ் மேலிடம் முயற்சித்தது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com