வங்காளதேசம் - மியான்மர் இடையே கரையை கடந்த மோக்கா புயல்!

காக்ஸ் பஜார் சட்டோகிராம் நகரங்கள் கடும் பாதிப்பு!
வங்காளதேசம் - மியான்மர் இடையே கரையை கடந்த மோக்கா புயல்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

வங்க கடலில் உருவான மோக்கா புயல், வங்காளதேசம் மற்றும் மியான்மர் இடையே நேற்று கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் வங்காளதேசத்தில் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.

புயல் கரையை கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதே போல் மியான்மரில் புயல், மழை, வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அற்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

புயலால் வடக்கு ராக்கைன் பகுதி முழுவதும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சிட்வே நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மோக்கா புயல் காரணமாக இந்தியாவில் திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

புயல் கரையை கடக்கும் காக்ஸ் பஜார் பகுதியில் ரோங்கியா அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 10 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுருந்தனர்.. இதே போல் மியான்மரின் மேற்கு ரக்கைன் கடற்கரையில் உள்ள சிட்வேயில் உள்ள முகாம்களிலும் அகதிகள் தங்க வைக்கப்பட்டுருந்தனர்.

புயலையடுத்து காக்ஸ் பஜார் பகுதியில் 1.90 லட்சம் பேரையும், சிட்டகாங்கில் 1 லட்சம் பேரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வங்காளதேச அதிகாரிகள் இடம் மாற்றி உள்ளனர். அவர்கள் 4 ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக 21 கப்பல்கள், கடல் ரோந்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் மருத்துவ குழுக்கள், ஆம்புலன்சுகள் ஆகியவையும் தயார் நிலையில் இருந்தது . வெள்ளம், சூறாவளி ஆகியவற்றால் காக்ஸ் பஜாருக்கு அதிக ஆபத்து ஏற்படலாம் என்றும் சூறாவளியால் 8 கடலோர கிராமங்களில் கடுமையான சேதம் ஏற்படலாம் என்றும் வங்கதேச ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com