இந்தியர்களை அச்சுறுத்தும் Cryptocurrency மோசடிகள்.

இந்தியர்களை அச்சுறுத்தும் Cryptocurrency மோசடிகள்.

கிரிப்டோகரன்சி எனப்படும் புரட்சிகரமான டிஜிட்டல் சொத்தானது உலகத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது எனலாம். என்னதான் இது பல்வேறு துறைகளை மாற்றுவதற்கான ஆற்றலைக் கொண்டிருந்தாலும், கிரிப்டோகரன்சிகளின் எழுச்சி சில முதலீட்டாளர்களை சுரண்ட விரும்பும் நேர்மையற்ற நபர்களையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளின் மீது மக்களுக்கு அதிகரித்து வரும் ஆர்வத்தால், எண்ணற்ற மோசடிகளும் இதில் நடந்து வருகிறது. 

கிரிப்டோகரன்சியில் இந்தியாவில் நடந்து வரும் மோசடிகளால், மக்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை பாதிப்படைந்து அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதன்முதலாக இந்தியாவில் நாடு முழுவதும் அதிர்ச்சியாலையை ஏற்படுத்தியது Bit Connect என்ற கிரிப்டோகரன்சி மோசடி. இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகமான வருவாய் தருவதாக வாக்குறுதியளித்து, Ponzi திட்டத்தின் கீழ் செயல்பட்டது இந்த மோசடி. இந்த திட்டமானது தோல்வியில் முடிந்தபோது இதில் முதலீடு செய்தவர்களை ஒன்றுமில்லாமல் வீட்டுக்கு அனுப்பியது. இந்த சம்பவம் தான் முதன் முதலில் கிரிப்டோகரன்சி சந்தையில் பதுங்கியிருக்கும் ஆபத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்தது. 

மற்றொரு பிரபலமான வழக்கு அமித் பரத்வாஜ் என்பவரால் திட்டமிடப்பட்ட Gain Bitcoin மோசடியாகும். Cloud Mining என்ற போர்வையில் பல முதலீட்டாளர்களை இதில் முதலீடு செய்ய வைத்தார் பாரத்வாஜ். இதில் கிடைக்கும் லாபத்தை அனைவருக்கும் பிரித்துத் தருவதாகவும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தார். இருப்பினும் இந்த திட்டத்தின் மோசமான தன்மை கண்டுபிடிக்கப்பட்டு, பரத்வாஜ் கைது செய்யப்பட்டார். இதில் முதலீடு செய்தவர்களின் பல கோடி ரூபாய் பணமும் காணாமல் போனது. 

Cashcoin கிரிப்டோ கரன்சி மோசடி, இந்தியாவில் கிரிப்டோ காயின் மோசடிகளின் மோசமான பகுதியை வெளிக்காட்டியது. இதை முறையான இந்திய டிஜிட்டல் நாணயமாக விளம்பரப்படுத்தி, பல முதலீட்டாளர்களை ஏமாற்றி, அவர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை இதில் முதலீடு செய்ய வைத்தனர். என்னதான் இதில் மோசடி செய்தவர்களை கைது செய்தாலும், ஏமாற்றப்பட்ட பணம் மீட்கப்படவில்லை. 

கிரிப்டோகரன்சி சந்தை தற்போது வீழ்ச்சியில் இருந்தாலும், இன்றளவும் இதில் பலவிதமான மோசடிகள் நடந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் கூட கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் 15 ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, 100 கோடி ரூபாய் வரை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. கார்த்திக் என்பவர் கிரிப்டோகரன்சி கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதில் பலரையும் முதலீடு செய்யச் சொல்லி இருக்கிறார். இதில் திருவாரூரைச் சேர்ந்த அமானுல்லா 2 லட்சம் முதலீடு செய்திருக்கிறார். 

இதுமட்டுமின்றி, அவருக்குத் தெரிந்த பலரையும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வைத்திருக்கிறார். முதலீடு செய்த சில மாதங்கள் அவர்களுக்கான பணத்தை சரியாக வழங்கி வந்த நிறுவனம், திடீரென தனது அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதனால் அந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றாக இணைந்து, பண மோசடி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில், சுமார் 8,000 மேற்பட்ட நபர்களிடமிருந்து 100 கோடி ரூபாய் வரை அந்நிறுவனம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதுபோன்ற கிரிப்டோகரன்சி மோசடிகளால், இது செயல்படும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தையே தவறாக நினைக்கக் கூடாது. இதன் உண்மையான ஆற்றலை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் பொறுப்பான முதலீட்டாளர் களாக செயல்பட வேண்டும். 

என்றுமே ஒரு விஷயத்தில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது. பிறர் சொல்கிறார்கள் என்பதற்காகவோ, விரைவாக பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்திலோ முதலீடு செய்தால், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com