

மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான நீட் முதுநிலைத் தேர்வு (NEET PG) 2025-இல் பங்கேற்ற மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுப்படி, தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் (NBEMS) இந்த ஆண்டிற்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை அதிரடியாகக் குறைத்துள்ளது. 2025-26 கல்வி ஆண்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வில் அதிகப்படியான மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் காலியாக உள்ள சுமார் 9,000 இடங்களை நிரப்பும் நோக்கில், கட்-ஆஃப் மதிப்பெண் 'மைனஸ் 40' (-40) வரை குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்றும், தகுதியான எம்பிபிஎஸ் (MBBS) மருத்துவர்கள் அதிக அளவில் மேற்படிப்பில் சேர வழிவகை செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று, 2 கட்ட கலந்தாய்வு நிறைவடைந்து விட்டது. அதில் 800 மதிப்பெண்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 276 மதிப்பெண்களும், ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 235 மதிப்பெண்களும் கட் ஆஃப் ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஆனால் 2 கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 9000 காலியிடங்கள் நிரம்பவில்லை.
இந்நிலையில் மத்திய அரசின் ஒப்புதலுடன் கட் ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. அதாவது பொதுப்பிரிவினர் 800 மதிப்பெண்களுக்கு 103 மதிப்பெண்கள் எடுத்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம். இதன் மூலம் பொதுப் பிரிவினருக்கான பர்சன்டைல் ஐம்பதிலிருந்து ஏழாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் மைனஸ் 40 (-40) ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பர்சன்டைல் 40-லிருந்து 0-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
2022 மற்றும் முந்தைய ஆண்டுகளிலும் இடங்களை நிரப்புவதற்காக இது போன்ற குறைப்புகள் செய்யப்பட்டன. தற்போது மீண்டும் கட்-ஆஃப் குறைக்கப்பட்டிருப்பது, தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.