தவெக கூட்டணி பேசிய போது உதாசீனப்படுத்தி வெளியேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி! – சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு..!!

CV sanmugam and Admk
CV.sanmugam Pressmeet
Updated on

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் எம்ஜிஆரின் மனைவியுமான, ஜானகி ராமச்சந்திரனின் நினைவு நாளை ஒட்டி ஏராளமான அதிமுகவினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். வேலுமணி மற்றும் சிவி.சண்முகம் தலைமையிலான அதிமுக பிரிவு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் இந்த ஊடகத்தின் வாயிலாக கோடான கோடி அதிமுக தொண்டர்களிடம் மற்றும் கழக நிர்வாகிகளிடம் சொல்லிக் கொள்வது , நாம் அனைவரும் அதிமுகவின் தொண்டர்கள் , எம்ஜிஆரின் தொண்டர்கள், அம்மாவின் பிள்ளைகள், நம் அனைவரின் நோக்கமும் மீண்டும் அதிமுகவை வலிமையாக்கி ஆட்சியைப் பிடிப்பதுதான்.

இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நம் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஆனால், ஒருபுறம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு மறுபக்கம் நிர்வாகிகளை நீக்கிக் கொண்டே இருக்கிறார். இதுவரை 31 மாவட்ட செயலாளர்களை பொறுப்பிலிருந்து நீக்கி உள்ளார். அவர்களுக்கு (வேலுமணி அணி) ஆதரவாக பொதுக்குழுவை கூட்ட யாரேனும் கையெழுத்திட்டால் , பதவியில் இருந்து நீக்குவேன் என்று எடப்பாடி பழனிச்சாமி அச்சுறுத்தி வருகிறார்.

தொண்டர்களிடமும் கட்சி நிர்வாகிகளிடம் அன்புடனும் ஆதரவுடன் செயல்பட வேண்டும். ஆனால் , இங்கே நிர்வாகிகளை பதவியை விட்டு நீக்குவேன் என்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். எப்போதும் அச்சத்தில் இருந்தால் அவர்கள் எவ்வாறு வேலை செய்வார்கள் கட்சி எவ்வாறு முன்னேறும்? பார்த்தீர்களா 31 மாவட்ட செயலாளர்கள் பதவிகளை நீக்கி இருக்கிறோம், ஒன்றிய செயலாளர்களை நீக்குவோம், நகர செயலாளர்களை நீக்குவோம் என்று மிரட்டுகிறார்கள்.

கட்சி நிர்வாகிகள் நீக்கப்படுவது சட்டத்திற்கு முரணானது. இவ்வாறு நீக்குவதற்கு அவருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. அதிகாரம் இருக்கிறது என்று நடவடிக்கை எடுத்தாலும் அது செல்லாது. இன்று வரை இந்த நிமிடம் வரை நீக்கப்பட்டவை எதுவும் செல்லாது. ஒரு கட்சி பிளவு பட்டிருக்கும் பொழுது அதன் நிர்வாகி எடுக்கும் முடிவுகள் செல்லாது. தேர்தல் ஆணையத்திற்கு சென்றாலும் நீதிமன்றத்திற்கு சென்றாலும் புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் செல்லாது.

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வது போல, தனது பொறுப்புக்கு பாதிப்பு வந்து விட்டதால் கசப்பை மறந்து ஒன்று கூடுவோம்! என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். சட்டமன்ற தேர்தலின் போது தவெக சார்பில் அதிமுகவோடு கூட்டணி பேச வந்தார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை உதாசீனம் செய்து வெளியே அனுப்பினார். தவெவுடன் கூட்டணி அமையக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி குறியாக இருந்தார்.

வலிமையான கூட்டணி இல்லாததுதான் அதிமுகவின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஓபன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு தயாராக இருந்தார் , ஒரு உறுப்பினராகவே இருந்து கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் , அவரை மீண்டும் சேர்க்கவில்லை. கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது, எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டார். கூட்டணிக்கு வர இருந்த தேமுதிகவை அரை சதவீத கட்சி என்று கூறி வெளியேற்றினார். இப்படி பேசினால் எந்த கட்சி கூட்டணிக்கு வரும்?

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி, மீண்டும் ஒரு படு தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும், தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும். அதிமுகவின் வாக்கு வங்கி தொடர்ச்சியாக சரிந்து கொண்டே வருகிறது, அதை பற்றி ஆராய்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி தயாராக இல்லை.அவர் யாரையும் அரவணைக்கவில்லை , அனைத்தையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ,பொதுக்குழுவை கூட்டி அதில் பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம். என்று கடுமையாக சிவி சண்முகம் குற்றம் சாட்டி இருந்தார்.

logo
Kalki Online
kalkionline.com