டாஸ்மாக் மதுவில் சயனைடு: விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்!

டாஸ்மாக் மதுவில் சயனைடு: விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்!
Published on

யிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூர் பகுதியில் இரும்புப்பட்டறை நடத்தி வரும் பழனி குருநாதன் மற்றும் அவரது நண்பர் பூராசாமி இருவரும் டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்தி இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரும் திடீரென இறந்து போய் உள்ளனர். விசாரணையில் அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு விஷம் கலந்திருந்ததே அவர்கள் இறப்புக்குக் காரணம் என்று காவல் துறை அறிவித்திருந்தது. டாஸ்மாக் மதுவில் சயனைடு கலக்கப்படுவதன் மர்மம் என்ன என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், 'மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரில் இரும்புப்பட்டறை நடத்தி வரும் பழனி குருநாதன், அதில் பணியாற்றி வரும் அவரது நண்பரான பூராசாமி ஆகிய இருவரும் மது குடித்து உயிரிழந்ததற்கு அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்ததுதான் காரணம் என்று காவல் துறை தெரிவித்திருக்கிறது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த இருவரும் நண்பர்கள், அவர்களுக்கு குடும்பத்திலோ, தொழிலோ எந்த பிரச்னையும் கிடையாது; அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதனால், அவர்கள் மதுவில் சயனைடு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் கூறி உள்ளனர். இத்தகைய சூழலில் அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்தது எப்படி? ஒருவேளை அவர்களே கலந்ததாக வைத்துக்கொண்டால், சயனைடு அவ்வளவு எளிதாக சந்தையில் கிடைக்கிறதா? கொடிய நஞ்சான சயனைடு விரும்பியவர்கள், விரும்பிய நேரத்தில் கிடைப்பதை அரசு அனுமதிக்கிறதா?

கடந்த மே 21ம் நாள் தஞ்சாவூர் மதுக்கடை ஒன்றில் மது அருந்தி உயிரிழந்த இருவர் உயிரிழந்ததற்கு, அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலக்கப்பட்டு இருந்ததுதான் காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுகுறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. இன்று வரை அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்போது அதே முறையில் மயிலாடுதுறையில் மேலும் இருவர் உயிரிழந்து உள்ளனர். அப்படியானால் டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுவிலேயே நஞ்சு கலந்திருந்ததா என்ற ஐயம் எழுகிறது. அதைப் போக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.

மது அருந்தி மக்கள் உயிரிழப்பது தமிழ்நாட்டில் தொடர்வதும், மதுவில் சயனைடு கலந்திருந்ததுதான் காரணம் என்று கூறிவிட்டு அரசு கடந்து செல்வதும் கவலை அளிக்கிறது. இது தொடர்பான மக்களின் ஐயங்களைப் போக்க உயர்நிலை விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என்று அன்புமணி அந்தப் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com