தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி, டிரைவர் விவேக் ஆகிய 2 பேர் பலியாகினர். இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் பார் உரிமையாளரும், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவருமான பழனிவேல், பார் ஊழியர் காமராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாருக்கு சீல் வைக்கப்பட்டது.
சயனைடு கலந்த மது குடித்து இருவரும் தற்கொலை செய்தனரா? அல்லது கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று டாஸ்மாக் கடை மற்றும் பாரில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட தடயவியல் துறை நிபுணர்கள் சென்றனர். அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டன.
பின்னர் டாஸ்மாக் கடை மற்றும் பாருக்குள் சென்று தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுபாட்டில்கள், பாரில் உள்ள பொருட்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சயனைடு உள்ளதா? எனவும் சோதனை செய்தனர்.
2 பேரும் சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் உயிரிழந்தது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், மதுவில் சயனைடு கலக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.
தொடர்ந்து தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கூடுதல் எஸ்.பி.க்கள் ஜெயச்சந்திரன், முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரது மேற்பார்வையில், டிஎஸ்பிக்கள் பட்டுக்கோட்டை பிரித்விராஜ் சவுகான், திருவிடைமருதூர் ஜாபர் சித்திக், திருவாரூர் பிரபு, தஞ்சாவூர் ராஜா, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.