பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனப் போலியாக நடித்து, 62 வயதான மூதாட்டி ஒருவரிடம் ரூ.7.87 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாபெரும் சைபர் மோசடியில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க மும்பை சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையின் பாலிஹில் பகுதியில் வசிக்கும் 62 வயது மூதாட்டி ஒருவரை, "பிரியா சர்மா" என்ற பெண் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தான் ஒரு பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி, ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தையில் பேசியிருக்கிறார்.
மேலும் மூதாட்டியை ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்த பிரியா சர்மா, அக்குழுவில் இருந்த மற்றவர்களும் தாங்கள் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் பெருமளவு லாபம் சம்பாதித்ததாகக் கூறி மூதாட்டியை நம்ப வைத்துள்ளனர். இவையனைத்தும் மோசடிக் கும்பலின் திட்டமிட்ட நாடகம் என்பது பின்னர் தெரியவந்தது.
இதையடுத்து, பிரியா சர்மாவிடம் ஒரு செயலியை பரிந்துரைத்து அதை பதவிறக்கம் செய்து பயன்படுத்த சொல்லியிருக்கிறார்கள். அவரும் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.7.87 கோடி ரூபாய் வரை அனுப்பி முதலீடு செய்துள்ளார். அந்த ஆப்பில் அதிகம் லாபம் கிட்டியதாக தகவல் வந்ததும், அதை நம்பி வங்கிக்கு சென்று பணத்தை மாற்ற முயன்றபோதுதான் தெரிந்தது இது ஒரு பக்கா க்ரைம் என்று.
ஆம்! இவையனைத்துமே அந்த கிரைம் கும்பலின் திட்டம். பின் இதுகுறித்து அந்த பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. மூதாட்டியின் பெயரில் எந்தவித முதலீடும் செய்யப்படவில்லை என்பது அப்போதுதான் அவருக்குத் தெரியவந்துள்ளது.
பின் உண்மையை உணர்ந்த மூதாட்டி உடனே சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இந்த மாபெரும் மோசடியில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற ஆன்லைன் முதலீட்டு மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.