சேலத்தில் இருந்து சீரடி வரை மிதிவண்டி பயணம். உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு!

சேலத்தில் இருந்து சீரடி வரை மிதிவண்டி பயணம். உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு!

நாற்பதைக் கடந்தாலே வயதாகி விட்டது என்று உடலில் உள்ள சகல பாகங்களிலும் வலியுடனும் சோர்வுடனும் வாழ்க்கையை நகர்த்தும் கணினி இளைஞர்கள் உள்ள இக்காலத்தில் வயதில் இல்லை முதுமை என நிரூபித்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த ஒருவர். அவரைப்பற்றிய சுவாரஸ்யமான செய்திதான் இது.

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் அமையப் பட்டுள்ள ட்ரக்கர்ஸ் கிளப், சைக்கிளிங் கிளப், வாக்கர்ஸ் கிளப், யோகா கிளப் ஆகியவற்றை நிறுவி உடல் நலம் மற்றும் மனநலத்தை பேணிக்காப்பதிலும், தெரிந்தவர் அறிந்தவர் நண்பர்கள் என பாகுபாடின்றி பிறந்தநாள் திருமண நாளுக்கு மறவாமல் வாழ்த்து கூறுவதிலும் சிறந்து விளங்கும் காசி ஸ்ரீ கனகசபாபதி அவர்கள் 16-02-2023 அன்று காலை சேலத்தில் இருந்து தனி ஒருவராக சீரடிக்கு சைக்கிள் பயணத்தை துவக்கி, 35 நாட்கள் பயணித்து 1207 KM தூரத்தை கடந்து 22-03-2023 அன்று சீரடியை சென்றடைந்து பாபாவின் தரிசனத்தை பெற்றார்.

இதில் என்ன பெரிய ஆச்சர்யம் என்கிறீர்களா? சபாபதி அவர்களுக்கு வயது 82 என்பதே. இந்த மிதிவண்டியில் தான் தனித்து பயணம் செய்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார் இவர்.

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சேலத்தில் இருந்து சீரடிக்கு சைக்கிளில் சென்ற இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பயணம் முடித்து சேலத்திற்கு வந்த அவருக்கு சேலம் “டிரக்கர்ஸ்  கிளப்” சார்பில் மேள தாளம் முழங்க கரகாட்டத்துடன் பொன்னாடை  அணிவித்தும் மலர் கிரீடம் சூட்டியும் வரவேற் பளிக்கப்பட்டது.

     அப்போது கனக சபாபதி கூறும்போது “ 82 வயதான நான் மக்களின் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 30 ஆண்டுகளாக சைக்கிளில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று உள்ளேன். இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி சைக்கிளில் சேலத்தில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு மார்ச் 22ஆம் தேதி வரை சுமார் 35 நாட்கள் பயணம் செய்து சீரடி சாய்பாபா கோவிலை சென்றடைந்தேன். வழியெங்கும்  தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியமும் மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. பல ஆண்டுகளாக சைக்கிள் பயணம் மேற்கொள்வதால் தற்போது இளைஞர் களிடம் சைக்கிள் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது” என்று கூறினார்.

     இந்த பாராட்டு விழாவில் திருவேணி குரூப்ஸ் உரிமையாளர் பாலசுப்ரமணியம் கலந்துகொண்டு அவரைப் பாராட்டினார். மேலும்  டிரெக்கர்ஸ் கிளப் நிர்வாகிகளுடன் ஓய்வு பெற்ற வன அதிகாரி கந்தசாமி மற்றும் சேலத்தில் உள்ள  பிரபலமானவர்களும்  கலந்து கொண்டனர்.

     எத்தனை வயதானால் என்ன? இந்த சமூகத்துக்கு ஏதேனும் ஒருநல்ல விழிப்புணர்வுச் செய்தியை தந்து கொண்டே இருப்பவர்கள் என்றும் இளமையானவர்களே. இல்லையா மக்களே?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com