

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தித்வா புயல் தற்போது சென்னைக்குத் தெற்கே சுமார் 540 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 28) அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தற்போது வங்கக்கடலில் நிலவும் தித்வா புயல் தற்போது சென்னைக்கு தெற்கே 540 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த தித்வா புயல், தற்போது வடக்கு, வடமேற்கு திசையில் நோக்கி மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 540 கி.மீ., தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதன்படி, நாளை மறுதினம் தித்வா புயல் சென்னையை நெருங்கி வர வாய்ப்புள்ளது. ஆனால், இங்கு கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
சென்னையை கடந்த பின், தித்வா புயல் ஆந்திரா நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. இதனால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,28) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துறைமுகத்திற்கு வெகு துாரத்தில் புயல் உருவாகி மோசமான வானிலை நிலவுவதை அறிவிக்கும் பொருட்டு காரைக்கால் துறைமுகத்தில் 4ம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி மற்றும் கடலுார் துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்து வருவதால், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.,28) அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.