தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தினமும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையுள்ளனர்.
அனைவருக்கும் கல்வியை கொண்டு செல்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும், ஏழை எளிய மாணவர்களை கல்வி நிலையங்களுக்கு வர வைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பள்ளி வரும் மாணவர்களுக்கான ஒரு வேளை உணவு உறுதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு அடையும் என்று கூறி வந்தார்.
காலை உணவு திட்டத்தை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி முன்பு 1978 பள்ளிகளில் செயல்பட்டு வந்த காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் செயல்பட்டு வரும் 31 ஆயிரத்து 8 அரசு பள்ளிகளிலும் படிக்கும் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 மாணவ மாணவிகள் பயனடைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தை முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள அரசு பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.