
மிசோரத்தில் கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினார். பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் சுமார் 40 பேர் கட்டுமானப் பணியில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.அய்ஸ்வாலிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள சாய்ரங் என்ற இடத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
ரயில்பாலம் இடிந்த விபத்தில் 17 பேர் பலியானது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் துரிதகதியில் நடந்து வருவதாக முதல்வர் ஜோரம் தங்கா தெரிவித்துள்ளார்.
“அய்ஸ்வால் அருகே சாய்ரங் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த துயரச் சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணியில் ஈடுபட்ட மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஜோரம்தங்கா எக்ஸ் தளத்தில் (டுவிட்டர் தளம்) செய்தி வெளியிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள செய்தியில், விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக மாநில ஆளுநர் ஹரி பாபு மற்றும் முதல்வர் ஜோரம்தங்காவுடன் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.