மணிப்பூரில் மெய்டீஸ் மாணவர்கள் இருவர் கொலை: 4 பேர் கைது!

மணிப்பூரில் மெய்டீஸ் மாணவர்கள் இருவர் கொலை: 4 பேர் கைது!

ணிப்பூரில் கடந்த ஜூலை மாதம் மெய்டீஸ் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்குபேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. மலை மாவட்டமான சூரசந்த்பூரில் அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பாவ்மின்லுன் ஹாகிப், மால்ஸாவ்ம் ஹாகிப், லிங்க்னேசோங் பைட், மற்றும் டின்னல்ஹிங் ஹென்தாங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரையும் சிபிஐ மற்றும் மணிப்பால் போலீஸார் இம்பாலில் இருந்து அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டிக்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர்.

இந்த கைது சம்பவம் தொடர்பாக லிங்க்னேசோங்கின் சிறுவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு குவாஹாட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காமரூப் மாவட்ட சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று மணிப்பூர் மாநில முதலவர் பைரேன் சிங் தெரிவித்தார்.எனினும் குக்கி மாணவர்கள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் மெய்டீஸ் மாணவர்கள் கொலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மால்ஸாவ்ம் மற்றும் பாவ்மின்லுன் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் எந்த தீவிரவாத குழுக்களையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் குக்கி மாணவர்கள் சங்கத்தின் லீமடா பிளாக் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் என்றும் அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.நான்கு பேர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின அமைப்பினர் சூரசந்த்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். குக்கி மாணவர்கள் அமைப்பு  இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனிடையே மணிப்பூரில் இணையதள சேவைகள் முடக்கம் அக்டோபர் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. மெய்டீஸ் இன மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் கோரி வருகின்றனர். ஆனால், இதற்கு பழங்குடியின மக்களான குக்கி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இரு இனத்தவர்களுக்கு இடையே உருவான மோதல் வன்முறையாக வெடித்தது. இதுவரை வன்முறைக்கு 200-க்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் மணிப்பூர் வன்முறைக்கு வெளிநாட்டு சக்திகளே காரணம் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. குறிப்பாக மியன்மார் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத குழுக்கள்தான் வன்முறையைத் தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com