ஆஸ்திரேலிய பெண்ணின் மூளையில் உயிருடன் வாழ்ந்து வந்த ஓர் ஒட்டுண்ணிப் புழுவை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது எதிர்காலத்தில் மற்றவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், நிமோனியா, காய்ச்சல், மனச்சோர்வு போன்ற பல அறிகுறிகள் இருந்ததால், அதற்காக பல ஆண்டுகள் இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் இந்தப் பிரச்சனை அவருக்கு தீராததால் கடந்த 2022 ஆம் ஆண்டு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரின் மூலையில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருந்தது தெரிய வந்தது. இதனால் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் திட்டமிட்டனர்.
அறுவை சிகிச்சையில் 8 சென்டிமீட்டர் நீளமுள்ள சிவப்பு நிற புழுவை பெண்ணின் மூளையில் பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். Ophidascaris Robertsi அழைக்கப்படும் ஒரு வகையான புழுவான இது இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் காணப்படும் மலைப்பாம்புகளுடன் தொடர்புடையது. மனிதனுக்குள் பாம்பு ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இப்பெண்ணுக்கு பாம்புகளுடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், பாம்புகள் அதிகமாக இருக்கும் ஏரிக்கு அருகில் தான் இப்பெண் வசித்து வருகிறார். எனவே அந்த பகுதியில் இருந்து சமைப்பதற்காக சேகரிக்கப்பட்ட கீரைகள், காய்கறிகளில் இந்த புழுவின் முட்டைகள் இருந்திருக்கலாம், அவற்றை இந்தப் பெண் தவறுதலாக உட்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதுவரை மனிதர்களுக்கு ஏற்பட்ட தொற்றுநோய்களில் சுமார் 75% நோய்கள் விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவியுள்ளான. இதில் கொரோனாவும் அடங்கும். அதிர்ஷ்டவசமாக இவற்றில் பெரும்பாலான தொற்று நோய்கள் எபோலா, கொரோனா போல மக்களுக்குப் பரவாது. இருப்பினும் உலகில் பல்வேறு பகுதிகளில் இத்தகைய ஒட்டுண்ணிகள் பரவுவதை கருத்தில் கொண்டால், எதிர்காலத்தில் இத்தகைய நோய்களின் பாதிப்புகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் பெண்ணின் மூளையிலிருந்து இந்தப் புழுவை நீக்கியதிலிருந்து அவரின் உடல்நிலை சீரடைந்து வருகிறது. இந்த ஒட்டுண்ணி மனிதர்களுக்கு பரவும் நிலை ஏற்பட்டால், மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.