பிரகாஷ்ராஜை எதிர்க்கும் கங்கனா ரணாவத்!
இந்தி மொழியை திணிக்காதீர்கள் என்று அமித்ஷாவை குறிப்பிட்டு பிரகாஷ்ராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ்க்கு எதிராக கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு ஆண்டாண்டு காலமாக இந்தி இணைப்பை எதிர்த்து வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமே அடித்தளமாக அமைந்தது. இப்படி மொழி திணிப்பு எந்த வகையில் வந்தாலும் தமிழ்நாடு எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி ஹிந்தி திவாஸ் விழாவில் பங்கேற்று பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது, இந்தி மொழி இந்தியா உடைய பன்முகத் தன்மையினுடைய வெளிப்பாடு. பிராந்திய மொழிகளுக்கான அதிகாரமாக இந்தி மொழியே உள்ளது என்று பேசினார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அமித்ஷாவினுடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு செய்திருந்தார். அதில், உங்களுக்கு இந்தி மொழி மட்டுமே தெரியும் என்பதால், எங்களை இந்தி பேச சொல்கிறீர்களா. முதலில் இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்று பதிவு செய்திருந்தார்.
தற்போது இதற்கு எதிர்வினையாக பாலிவுட் திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ள கங்கனா ரணாவத், பிரகாஷ்ராஜுக்கு பதில் அளித்துள்ளார். அதில், அமித்ஷா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாய் மொழி குஜராத்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் பாஜகவிற்கு ஆதரவாகவும், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவிற்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.