பறவைகளுக்கு ஆம்புலன்ஸ். அசத்தும் டெல்லி சகோதரர்கள்.
டெல்லியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் காயம் அடைந்த பறவைகளை காப்பாற்றுவதற்காக சொந்தமாக ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகின்றனர்.
நாம் வெளியே செல்லும்போது அடிக்கடி மின் கம்பத்தில் பட்டும், ஏதாவது நூலில் சிக்கி காயம் அடைந்த பறவைகளை அவ்வப்போது நம்மால் பார்க்க முடியும். அவற்றை பெரும்பாலும் யாரும் காப்பாற்ற முயற்சிக்க மாட்டார்கள். அந்தப் பறவைகளுக்கு உதவ வேண்டும் அல்லது அவற்றை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமே வருகிறது.
இப்படி அடிபட்ட பறவைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் தங்களின் இரு சக்கர வாகனத்தை ஆம்புலன்ஸாக மாற்றி, பறவைகளுக்கு சேவை நடத்தி வருகின்றனர். அபிஷேக் மற்றும் அமித் என்ற இரண்டு சகோதரர்களும் பறவைகளுக்காகவே கடந்த ஐந்து ஆண்டுகளாக, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி சேவை செய்து வருகின்றனர். இதற்காகவே தங்களின் இருசக்கர வாகனத்தை ஆம்புலன்ஸ் ஆக மாற்றி அதில் பறவைகளுக்கு தேவையான அனைத்து முதலுதவி சார்ந்த விஷயங்களையும் வைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து சொந்தமாக பார்மசி நடத்திவரும் அமித் கூறுகையில், "கடந்த 2018 ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, இறக்கையில் அடிபட்ட பறவை ஒன்று பறக்க முடியாமல் மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த பறவையை நாங்கள் மீட்பதற்கு அரை மணி நேரம் போராடினோம். இருந்தும் முடியவில்லை. தீயணைப்புத் துறையினரை அழைத்து அப்பறவையை பத்திரமாக மீட்டு சிகிச்சையளித்து பறக்கவிட்டோம். இந்த சம்பவத்திற்குப் பிறகு, காயமடைந்து போதிய உதவியின்றி இருக்கும் பறவைகளுக்கு எங்களால் முடிந்ததை செய்ய வேண்டும் எனத் தோன்றியது.

எனவே எங்களின் ஓய்வு நேரத்தை பறவைகளுக்கு செலவிடுவது என முடிவெடுத்தோம். ஏனெனில் மனிதர்களைப்போல பறவைகளுக்கும் இந்த உலகத்தில் வாழ உரிமை உள்ளது. நாம் தற்போது வளர்ச்சி என்கிற பெயரில் பறவைகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறோம். பறவைகளின் வாழ்விடங்களில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போது எங்களுக்கு அனைவருமே ஆதரவு கொடுக்கிறார்கள். எங்கள் இருவரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இப்போது 600 பேர் இணைந்துள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் எங்களுக்கு உதவுகின்றனர். இதுவரை இத்திட்டத்தின் மூலம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகளைக் காப்பாற்றியுள்ளோம். எங்களால் தினசரி 30 முதல் 35 பறவைகள் வரை காப்பாற்றப்பட்டு வருகிறது" என்றார்.
இப்படி பறவைகளுக்காக தங்களின் வாகனத்தையே ஆம்புலன்ஸாக மாற்றிய இந்த டெல்லி சகோதரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.