போர் பதற்றமான சூழ்நிலையில் நாளை இஸ்ரேல் செல்கிறார் ஜோ பைடன்!

American president Joe Biden
American president Joe Biden

ஸ்ரேலுக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேல் செல்ல இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கென் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் புதன்கிழமை இஸ்ரோல் தலைநகர் டெல்அவில் செல்ல இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் செல்லும் ஜோ பைடன், பின்னர் அங்கிருந்து ஜோர்டான் சென்று அந்த நாட்டு தலைவர்களையும் சந்திக் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீனர்களின் உரிமைக்காக ஹமாஸ் போராடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து மக்களை காக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளென்கின் தெரிவித்தார். இஸ்ரேலின் தேவைகள் என்ன என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு உதவ ஜோ பைடன் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ஜோ பைடன் இஸ்ரேல் வர திட்டமிட்டுள்ளதை அடுத்து புதன்கிழமை இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேலில் கொடூர தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். அதேநேரம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறானது என்று ஜோ பைடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. மேலும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் தெற்கு பகுதியில் நுழைந்து ஏராளமான இஸ்ரேலியர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 11வது நாளாக போர் நடக்கும் சூழலில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் என 3,000  பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள்  காயமடைந்துள்ளனர்.

இதனிடையே காசாவில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முனைப்புடன் முன்னேறி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக இதனை இஸ்ரேல் கருதுகிறது. இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் செல்வதை உறுதி செய்துள்ளார். இதனால் பேரழிவை ஏற்படுத்தும் தரைவழித் தாக்குதல் தவிர்க்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com