ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது!
ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போலீஸார் விஜயவாடா அழைத்துச் சென்றுள்ளனர்.
சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக இருந்தபோது மாநில திறன் வளர்ப்புக் கழகத்தில் ரூ.317 கோடிக்கு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை நந்தியாலில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று இரவு அந்த இடத்துக்குச் சென்று அவரிடம் கைது செய்வதற்கான வாரண்டை அளித்தனர். எனினும் அவரது கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீஸாரால் அவரை உடனடியாக கைது செய்ய முடியவில்லை. பின்னர் அதிகாலையில் அவரை போலீஸார் கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவை கைது செய்யும் போது போலீஸாருக்கும், தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே சிறிய கைகலப்பு நடந்தது. கைது செய்வதற்கு போதுமான ஆதாரத்தை போலீஸார் காட்டவில்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார். ஊழலில் எனக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை காட்டாமல் எப்படி கைது செய்யலாம் என சந்திரபாபு கேட்டார்.
கைது செய்ய வந்த அதிகாரிகளிடம் சந்திரபாபு நாயுடு ஆதரவாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். கைது வாரண்ட் கொண்டுவந்துள்ளதாகவும் காவல்துறை அறிக்கையில் அனைத்து விவரங்களும் உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தெலுங்கு மக்களுக்கு சேவை செய்துவரும் தம்மை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 45 ஆண்டுகளாக தெலுங்குதேச மக்களுக்கு நான் சேவை செய்து வருகிறேன். அவர்களின் நலனுக்காக எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஆந்திரம் எனது தாயகம். மக்களுக்கு சேவை செய்வதிலிருந்து என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக அவரது கட்சியினர் மாநிலங்களில் பரவலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் டக்குபதி புரந்தேஸ்வரி, சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முறையான நோட்டீஸ் அளிக்காமல் அவரை கைது செய்வது எந்தவிதத்திலும் சரியானது இல்லை. வழக்கில் அவரது பெயரை குறிப்பிடாமல், கைதுக்கு விளக்கும் அளிக்காமல், எந்தவித நடைமுறையையும் பின்பற்றாமல் அவரை கைது செய்வதை பா.ஜ.க. கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். நள்ளிரவில் அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.