புதுச்சேரிக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரங்களின் அங்கீகாரம் பெற முயற்சி!
புதுச்சேரி மாநிலத்திற்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரங்களின் அங்கீகாரத்தை பெற இன்டாக் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.
இன்டாக் நிறுவனம் புதுச்சேரி மாநிலத்தை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்க்க முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பாரம்பரிய பாதுகாப்புக் குழு யுனெஸ்கோவிடம் விண்ணப்பித்திருக்கிறது.
இதுகுறித்து இன்டாக் நிறுவனத்தின் புதுச்சேரி பிரிவு இணை இயக்குனர் அசோக் பாண்டா தெரிவித்தது, புதுச்சேரி மாநிலத்திற்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரத்திற்கான அங்கீகாரம் கிடைத்தால் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியடையும். சுற்றுலா தற்போது இருப்பதை விட பன்மடங்கு மேம்படும். மேலும் சுற்றுலா மற்றும் நகர் புற சுற்றுச்சூழல் மேலாண்மை, சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து அதிக அளவில் நிதிகள் கிடைக்க வழி ஏற்படும்.
இதன் மூலம் மாநிலத்தினுடைய உள்கட்டமைப்பு மேலும் வளர்க்க முடியும். மேலும் மக்களினுடைய வாழ்வாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இதற்காக மூன்று முக்கிய முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. பாரம்பரிய தளங்கள், பாரம்பரிய வளாகங்களை பாதுகாக்க புதுச்சேரி அரசு பாரம்பரிய பாதுகாப்பு ஒழுங்கு முறைக் குழுவை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 118 தனியார் கட்டிடங்கள், 13 மத கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மக்களிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் இதற்கு யுனெஸ்கோ வைத்திருக்கக்கூடிய 10 நிபந்தனைகளில் 3 முக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவை புதுச்சேரி மாநிலத்திற்கு இருக்கிறது. பிரஞ்சு காலனி ஆதிக்க கட்டிடங்கள், மத வழிபாட்டு தலங்கள், அரசு அலுவலகங்கள், வீடுகள் அதில் உள்ள ஜன்னல், திண்ணை, முற்றம் போன்றவை புராதான அடையாளங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டிருக்கிறது.
தற்போது இந்தியாவில் அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய நகரங்கள் யுனெஸ்கோவின் புராதான நகரத்திற்கான அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது. டெல்லி தற்காலிக அங்கீகாரத்தை வைத்திருக்கிறது. இந்த நிலையில் தான் புதுச்சேரிக்கு இந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் புதுச்சேரி மாநில அரசு அடிப்படை தேவைகளை உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். யுனெஸ்கோ அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதற்கு முன்பு அந்த பணிகள் செய்து முடித்து இருந்தால் நிச்சயம் புதுச்சேரி அங்கீகாரத்தை பெறும் என்று தெரிவித்தார்.