காவிரி விவகாரம்: பெங்களூருவில் பந்த்.. 144 தடையுத்தரவு அமல்!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள், கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் அரசியல் அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (இன்று) பந்த் அறிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக்கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) மற்றும் பெங்களூர் நகர போக்குவரத்து நிறுவனமும் பேருந்து சேவைகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தியுள்ளன.

காவிரி மேலாண்மைக் கழகம் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 5,000 கன அடிவீதம் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் போதிய மழை இல்லாததாலும், அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதாலும், விவசாயிகள் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும், இதையடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள் மற்றும் இதர கன்னட அமைப்புகள் இந்த பந்த் நடத்த அழைப்புவிடுத்துள்ளன.

பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை வீட்டிருந்து பணி செய்யுமாறு நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நகரில் போக்குவரத்து சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ள. ஓலா, உபர் போன்ற வாடகைக் கார் நிறுவனங்களும் இயங்கவில்லை.ஹோட்டல் நிர்வாகம் பந்த்-க்கு ஆதவு தெரிவித்துள்ள போதிலும் அவை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மெட்ரோ ரயில் சர்வீசும் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் மருத்துவமனைகள், மருந்து கடைகள், அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக பந்த்-க்கு எதிர்க்கட்சிகளான பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற உள்ள பெங்களூரு பந்த்-க்கு ஆதரவு தெரிவிப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் தமிழகத்தின் ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமியும் கன்னட பந்த்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதற்கு பெருமளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பந்த்-த்தை தடுக்கப்போவதில்லை என்றும் அமைதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com