மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டம்:மம்தா பானர்ஜி!

Mamata Banerjee
Mamata Banerjee

2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்கூட்டியே அதாவது, இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் கட்சியின் இளைஞர்கள் அணி மாநாட்டில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பேசினார். அப்போது, மக்களவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தேர்தலை முன்கூட்டியே அதாவது வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திலேயே தேர்தலை நடத்திவிட பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் ஹெலிகாப்டர்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அனைத்து ஹெலிகாப்டர்களையும் பா.ஜ.க. இப்போதே வாடகைக்கு முன்பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதேச்சாதிகாரம் தலைதூக்கிவிடும் என்று அவர் எச்சரித்தார். ஏற்கெனவே காவி கட்சியினர் நாட்டில் எதேச்சாதிகார ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேற்குவங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 9 பேர் பலியானார்கள். இதை குறிப்பிட்டு பேசிய முதல்வர் மம்தா, சிலர் சட்டவிரோதமாக செயல்படுகிறார்கள் அதற்கு போலீஸார் சிலர் ஆதரவாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

மாநிலத்தில் பெரும்பாலான போலீஸார் நேர்மையுடன் இருந்தாலும் சிலர் சட்டவிரோதமாக சிலருக்கு உதவி வருகின்றனர் என்றார். பட்டாசு தயாரிக்க விரும்புபவர்கள் பசுமை பட்டாசுகளைத் தயாரிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.பசுமை பட்டாசு தயாரிப்பதால் லாபம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால், மிகவும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்குவங்கத்தில் முப்பது ஆண்டுக்காலமாக இருந்த இடதுசாரிகள் ஆட்சிக்கு நாங்கள் முடிவு கட்டினோம். அதேபோல் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கும் முடிவு கட்டுவோம் என்றார் அவர்.வெறுப்புணர்வை தூண்டும் கோஷங்களை போடும் பா.ஜ.க. மற்றும் ஏபிவிபி அமைப்பினர் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் இஷ்டம்போல் கோஷம்போடுவதற்கு இது ஒன்றும் உத்தரப்பிரதேசம் அல்ல என்றும் பானர்ஜி குறிப்பிட்டார்.

இதனிடையே பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடைபெறலாம் என்று ம்ம்தா குறிப்பிட்டுள்ளது பற்றி கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, ஆர்.எஸ்.எஸ். எண்ணத்தைத்தான் மம்தா வெளிப்படுத்துவது போல் தெரிகிறது. மேலும் இதர எதிர்க்கட்சிகளை திசைத்திருப்பவும் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். எனினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com