
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏழைகளுக்கு விரோதமான அரசு என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார். முதலாளிகளுக்கு ஆதரவான அரசு என்பதால்தான் ஏழைகளுக்கு கூடுதல் அரசி வழங்கும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு மத்திய அரசு மறுத்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அன்னபாக்யா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு கூடுதலாக 5 கிலோ அரசி வழங்க திட்டமிட்டு அதற்காக மத்திய அரசிடம் கூடுதல் அரிசி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
நான் சென்ற முறை கர்நாடக முதல்வராக இருந்தபோது ஏழைகளுக்கு 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், முந்தைய பா.ஜ.க. அரசு அதை 5 கிலோவாக குறைத்துவிட்டது.தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு கூடுதலாக ஐந்து கிலோ அரிசி வழங்குவதாக உறுதியளித்திருந்தோம் என்று சித்தராமையா தெரிவித்தார்.
கூடுதல் அரசி கோரி இந்திய உணவுக் கழகத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அரிசி கொள்முதல் தொடர்பாக உடன்பாடும் ஏற்பட்டது. கர்நாடகம் கேட்ட அரிசியை வழங்கவும் இந்திய உணவுக் கழகம் முன்வந்தது.
நாங்களும் அவர்களை நம்பினோம். ஆனால் கடைசி நேரத்தில் மத்திய அரசு, அரிசி வழங்க மறுத்துவிட்டது. நாங்கள் இலவசமாக அரசி கொடுங்கள் என்று கேட்கவில்லை. அதற்கான விலையை கொடுக்கவும் தயாராக இருந்தோம். நாங்கள் அரிசி கேட்டபோது தருவதாகச் சொன்னவர்கள் பின்னர் திடீரென பின்வாங்கிவிட்டனர். மத்திய அரசு ஏழைகளுக்கு எதிராக நடந்துகொள்வதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும் என்றார் சித்தராமையா.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏழைகளுக்கு விரோதமான அரசு. அவர்களிடம் மனிதாபிமானம் என்பதே இல்லை என்றும் சித்தராமையை குறிப்பிட்டார்.ஏழைகளுக்கு இலவசமாக அரிசி கொடுத்தால் அந்த மாநிலங்கள் திவாலாகிவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மத்திய அரசு கர்நாடகத்துக்கு அரிசி கொடுக்க மறுத்ததன் பின்னணி இதுதான். ஆனால், நாங்கள் அவர்களிடம், மக்களுக்கு கொடுத்துள்ள ஐந்து வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். அதனால் ஒன்றும் கர்நாடகம் திவாலாகிவிடாது என்பதை தெள்ளத் தெளிவாக கூறிவிட்டோம் என்றார் சித்தராமையா.
கர்நாடக மக்களுக்கு கொடுத்த ஐந்து வாக்குறுதிகளில் நான்குவாக்குறுதிகளை, அதாவது மகளிர்க்கு இலவச பஸ் பயணம், கிருஹ லெட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,000 உதவி, கிருஹ ஜோதி திட்டத்தின்கீழ் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், அன்னபாக்யா திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச அரிசி ஆகிய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். இன்னும் ஒரு வாக்குறுதி நிலுவையில் உள்ளது. அதையும் விரைவில் நிறைவேற்றுவோம் என்றார் சித்தராமையா.