இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்...களத்தில் 7 பா.ஜ.க. எம்.பி.க்கள்!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கு தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 200 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் காங்கிரஸும், இழந்த ஆட்சியை மீண்டும் பெறும் நோக்கில் பா.ஜ.க.வும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க. முதல் கட்டமாக 41 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைப் போலவே ராஜஸ்தான் தேர்தலிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் 7 பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

வேட்பாளர்கள் தேர்வில் பா.ஜ.க. சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. ஜோத்வாரா தொகுதியில் போட்டியிட இந்த முறை ராஜ்பால் சிங் ஷெகாவத்துக்கு சீட் தரப்படவில்லை. அவருக்கு பதிலாக மக்களவைத் தொகுதி எம்.பி.யான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அங்கு போட்டியிடுகிறார்.

இதேபோல முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தின் மருமகன் நர்பத் சிங் ராஜ்விக்கு வித்யாதர் நகரில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த தொகுதி தியாகுமாரி எம்.பி.க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜெய்ப்பூர் ஊரகப்பகுதி தொகுதி எம்.பி.யான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர். ராஜ்மசந்த் தொகுதி எம்.பி.யான தியா குமார், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது அவருக்கு பேரவைத் தேர்தலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினரான கிரோரி லால் மீனா, ஆல்வார் மக்களவை தொகுதி எம்.பி. பாலக்நாத் இருவரும் தஜாரா தொகுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அஜ்மீர் தொகுதி எம்.பி.யான பாகீரத் செளதுரி கிஷன்கர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜுன்ஜுனு தொகு எம்.பி. நரேந்திர குமார் மண்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். தேவ்ஜி படேல் எம்.பி. சஞ்சோர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

எனினும் முதல் பட்டியலில் மாநிலத்தின் பிரபலமான தலைவர்களான முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் சதீஷ் பூனியா ஆகியோர் பெயர் இடம்பெறவில்லை. இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது குறித்து கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தினர் இப்போதே விவாதிக்க தொடங்கிவிட்டனர்.

ராஜஸ்தானில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.இதனிடையே தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று தேவ் உதானி ஏகாதசி தினமாக இருப்பதால் அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 50,000 திருமணங்கள் நடைபெறும் என்றும் இதனால் வாக்கு சதவீதம் பாதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com