விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவிடும் பா.ஜ.க. அரசு..குழந்தைகள் உயிருடன் விளையாடுகிறது: ராகுல்காந்தி!

விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவிடும் பா.ஜ.க. அரசு..குழந்தைகள் உயிருடன் விளையாடுகிறது: ராகுல்காந்தி!

விளம்பரத்துக்காக கோடிக் கணக்கில் செலவிடும் பா.ஜ.க. குழந்தைகள் உயிருடன் விளையாடி வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், நாந்தேத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள், சிகிச்சை வசதிகள் இல்லாம் குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறினார்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வாத்ரா, இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டு அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாந்தேத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூவர் அடங்கிய நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, எக்ஸ் தளத்தில், மருந்து, மாத்திரைகள், ஊசி உள்ளிட்டவை பற்றாக்குறையால் முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் உயிரிழந்துள்ளது. இது மிகவும் வேதனைக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ஜ.க. அரசு விளம்பரங்களுக்காக கோடிக் கணக்கில் செலவிட்டு வருகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்க அவர்களிடம் பணம் இல்லை. பா.ஜ.க.வினருக்கு ஏழைகளின் உயிர்களைப் பற்றி கவலை இல்லை போலும் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனம் கலைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாந்தேத் அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறையால் 12 குழந்தைகள் உள்பட 24 நோயாளிகள் இறந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மருந்து, மாத்திரைகள், ஊசி பற்றாக்குறையே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் மிகவும் சீரியஸானது. மகாராஷ்டிர அரசு விளம்பரம் தேடுவதிலேயே கவனம் செலுத்தாமல் மக்கள் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com